ஊழல்வாதிக்கு பிரசாதம் ‘டெண்டர்’ நிமிஷாம்பா கோவிலில் குளறுபடி
ஊழல்வாதிக்கு பிரசாதம் ‘டெண்டர்’ நிமிஷாம்பா கோவிலில் குளறுபடி
UPDATED : நவ 10, 2026 12:00 AM
ADDED : நவ 09, 2026 07:36 PM

மாண்டியா: பிரசித்தி பெற்ற நிமிஷாம்பா கோவிலின் அன்னதானம் மற்றும் லட்டு பிரசாதம் தயாரிக்கும் பணியை, திருட்டு நபரிடம் ஒப்படைத்த கோவில் நிர்வாகத்தின் செயல், சர்ச்சையாகியுள்ளது.
ஹிந்து அறநிலையத்துறை விதிமுறைகளின்படி, கோவில்களில் அன்னதானம், பிரசாதம் வினியோகிப்பு பணிகளை, இ – டெண்டர் மூலமாகவே கொடுப்பது கட்டாயம். ஆனால் நிமிஷாம்பா கோவிலில், எந்த பொது அறிவிப்பும் வெளியிடாமல், டெண்டர் அழைக்காமல் அன்னதானம் பிரசாதம், லட்டு பிரசாதம் தயாரிக்கும் பொறுப்பை சித்தராஜு என்பவரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவின், கஞ்சாம் கிராமத்தில் வரலாற்று பிரசித்தி பெற்ற, நிமிஷாம்பா கோவில் உள்ளது.
கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன், இந்த கோவிலில் பிரசாதம் தயாரிக்கும் பணியை, மமதா கேட்டரிங் உரிமையாளர் சித்தராஜுவிடம் ஒப்படைத்திருந்தனர்.
அப்போது இவர் கோவிலுக்கு சொந்தமான பித்தளை விளக்குகள், பெரிய, பெரிய தாமிர பாத்திரங்களை திருடி, சரக்கு வாகனத்தில் ஏற்றி சென்றபோது, அன்றைய நிர்வாக அதிகாரிகள் மற்றும் அர்ச்சகரிடம், கையும், களவுமாக சிக்கினார். அதன்பின் அவரது டெண்டர் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டு, அவரை வெளியேற்றினர். தற்போது அதே நபருக்கு, அன்ன பிரசாதம், லட்டு பிரசாதம் தயாரிக்கும் பொறுப்பை அளித்துள்ளனர்.
நிமிஷாம்பா கோவில் நிர்வாகத்தின் செயலால், பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ‘கோவில் பொருட்களை திருடி, சிக்கிய நபருக்கு பிரசாதம் தயாரிப்பது போன்ற முக்கியமான பொறுப்பை அளித்திருப்பது சரியல்ல’ என, கண்டித்துள்ளனர்.
