ADDED : செப் 02, 2026 11:02 PM
பெங்களூரு: பெங்களூரின் ஹட்சன் சதுக்கத்தில் இருந்து, சாளுக்கியா சதுக்கம் வரையிலுள்ள, 222 தெரு விளக்குகளில், 140 விளக்குகள் எரியாததால், பெங்களூரு மத்திய மாநகராட்சி மின்சார பிரிவு செயல் பொறியாளர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
பெங்களூரு நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா, கடந்த ஆக., 28ம் தேதி நகரில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
இது தொடர்பாக அதிகாரிகளுடன் கூட்டம் நடத்திய அமைச்சர், ஹட்சன் சதுக்கத்தில் இருந்து சாளுக்கியா சதுக்கம் வரையிலுள்ள 222 தெரு விளக்குகளில், 140 விளக்குகள் எரியாதது தொடர்பாக, செயல் பொறியாளர் ரமேசிடம் விளக்கம் கேட்டார்.
அதிகாரி அளித்த விளக்கமும், கள ஆய்வும் முரண்பாடாக இருந்ததால், ரமேஷ் மீது அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா அதிருப்தி தெரிவித்திருந்தார்.
அமைச்சரின் வழிகாட்டுதல்படி, இணை ஆணையர், செயல் பொறியாளர் ரமேசை, சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்தார்.
அந்த உத்தரவில், 'அமைச்சரின் அறிவுறுத்தல்களை ரமேஷ் பொருட்படுத்தவில்லை. அவருக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்ற தவறி விட்டார்' என குறிப்பிட்டிருந்தார்.
