கலவரத்தில் ஒருவர் கொலை; 17 பேருக்கு ஆயுள் தண்டனை
கலவரத்தில் ஒருவர் கொலை; 17 பேருக்கு ஆயுள் தண்டனை
ADDED : ஜூலை 25, 2026 12:34 AM
யாத்கிர்: பேனர் கட்டும் விஷயத்தில் ஏற்பட்ட கலவரத்தில், நபரை கொலை செய்த வழக்கில், 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
யாத்கிர் மாவட்டம் ஷஹாபுரா தாலுகாவின் கன்யாகோளூர் கிராமத்தில், 2014ம் ஆண்டு ஜனவரி 15 மற்றும் 16ம் தேதியன்று, சவுடேஸ்வரி தேவி கோவில் திருவிழா நடந்தது.
திருவிழாவில் எஸ்.சி., பிரிவினர், உயர் ஜாதிகளின் தலைவர்களின் பேனர், கட் -- அவுட் வைக்கும் விஷயத்தில், தகராறு நடந்தது.
இது குறித்து கிராமத்தில் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து நடந்தது. அப்போது தேவேந்திரப்பா என்பவர், ஒவ்வொரு விஷயத்திலும் குறுக்கிடுகிறார் என பலரும் குற்றஞ்சாட்டினர். தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர். தப்பியோடியும் விடாமல் விரட்டி சென்று, கீழே தள்ளி கோடாரி, கற்களால் அடித்து கொலை செய்தனர்.
இது தொடர்பாக, வழக்கு பதிவு செய்த ஷஹாபுரா போலீசார், பலரை கைது செய்தனர். யாத்கிர் மாவட்ட, செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விசாரணை நடத்திய நீதிமன்றம், 17 பேருக்கு ஆயுள் தண்டனை, ஒருவருக்கு ஓராண்டு, இருவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது.
