/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
2,878 அரசு மருத்துவமனைகளில் 14ல் மட்டுமே தீ தடுப்பு சாதனம்
/
2,878 அரசு மருத்துவமனைகளில் 14ல் மட்டுமே தீ தடுப்பு சாதனம்
2,878 அரசு மருத்துவமனைகளில் 14ல் மட்டுமே தீ தடுப்பு சாதனம்
2,878 அரசு மருத்துவமனைகளில் 14ல் மட்டுமே தீ தடுப்பு சாதனம்
ADDED : ஆக 12, 2025 11:57 PM

பெங்களூரு:கர்நாடகாவில் உள்ள 2,878 அரசு மருத்துவமனைகளில், 14 மருத்துவமனைகளில் மட்டுமே, தீ விபத்தைத் தடுக்கும் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன என்பது தெரிய வந்துள்ளது.
மேல்சபையில், நேற்று நடந்த கேள்வி நேரத்தில், பா.ஜ., உறுப்பினர் தனஞ்செய் சர்ஜியின் கேள்விக்கு பதிலளித்து, சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறியதாவது:
கர்நாடகவில் அரசு மருத்துவமனை உட்பட அனைத்து மருத்துவமனைகளிலும் தீ விபத்துகளைத் தடுக்கும் சாதனம் பொருத்துவது கட்டாயம். ஆனால் பல மருத்துவமனைகளில் இந்த விதிகள் பின்பற்றப்படவில்லை. மாநிலத்தில் 2,878 அரசு மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில், 14 மருத்துவமனைகளில் மட்டும், தீ விபத்தைத் தடுக்கும் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அதே போன்று, 5,850 தனியார் மருத்துவமனைகள் உள்ளன. இதல் 315 மருத்துவமனைகளில், தீ விபத்தைத் தடுக்கும் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேசிய கட்டட பாதுகாப்பு விதிமுறைகளின்படி, மாநிலத்தின் அனைத்து மருத்துவமனைகளிலும், தீ விபத்தைத் தடுக்க ஒரே மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் பல்வேறு மருத்துவமனைகள் இந்த விதிகளை மீறுகின்றன.
கடந்தாண்டு மூன்று மருத்துவமனைகளில், தீ விபத்துகள் ஏற்பட்டன. இத்தகைய சம்பவங்களை கட்டுப்படுத்துவது குறித்து, ஆலோசனை நடத்தப்பட்டது. அனைத்து மருத்துவமனைகளிலும், தீ விபத்தை கட்டுப்படுத்தும் சாதனம் பொருத்த வேண்டும் என, சுகாதாரத்துறை உத்தரவிட்டது. இதை மருத்துவமனை நிர்வாகங்கள் பொருட்படுத்தவில்லை என்பது, சுகாதாரத்துறை ஆய்வில் தெரிந்தது.
அனைத்து மருத்துவமனைகளிலும், தீ தடுப்பு சாதனங்கள் பொருத்த, 550 கோடி ரூபாய் செலவாகும். அரசின் அனுமதி பெற்று, படிப்படியாக சாதனங்கள் பொருத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.