'ஸ்கூபா டைவிங்'கில் அசத்தும் எதிர்க்கட்சி தலைவரின் மகன்
'ஸ்கூபா டைவிங்'கில் அசத்தும் எதிர்க்கட்சி தலைவரின் மகன்
ADDED : மே 07, 2026 11:06 PM

: அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவில் கடலுக்கு அடியில் மிகப்பெரிய தேசிய கொடியை காட்சிப்படுத்திய சாதனையாளர்கள், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர். இந்த சாதனையில், கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் அசோக்கின் மகன் சரத்தும் பங்கேற்றுள்ளார்.
சாகச விளையாட்டுகளில் அதிக ஆர்வம் உள்ள சரத், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் பட்டதாரி. இவர், பல விளையாட்டுகளில் திறன் கொண்டவர். ஸ்கூபா டைவ் செய்வதிலும் கை தேர்ந்தவர். பாரா கிளைடிங் மற்றும் மலையேற்றத்தில் வல்லவர். ஸ்கூபா டைவிங்கில் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் வென்றவர்.
அந்தமான் மற்றும் நிக்கோபரின், ஸ்வராஜ் தீவில் கடலின் ஆழத்தில் இந்தியாவின் மிகப்பெரிய தேசிய கொடியை காட்சிப்படுத்தும் சாதனை, ஏப்ரல் 2ல் நடந்தது. கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற இந்த சாதனையில், சரத் பங்கேற்றிருந்தார். இதன் மூலம் கர்நாடகாவின் பெருமையை, தேசிய அளவில் உயர்த்தினார். இந்த சாதனையில் நாட்டின் பல்வேறு மாநிலங்களின், 200 க்கும் மேற்பட்ட ஸ்கூபா டைவர்கள் பங்கேற்றனர்.
ஆர்ப்பரிக்கும் அலைகளுக்கு நடுவே, எதிர் நீச்சல் போட்டு கடலின் ஆழத்துக்கு செல்வது, அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அங்கு தேசியக்கொடியை விரித்து சாதனை செய்துள்ளனர். இதற்கு தைரியமும், தன்னம்பிக்கையும் வேண்டும்.
பொதுவாக அரசியல்வாதிகளின் பிள்ளைகள், அரசியலில் நுழைந்து எம்.எல்.ஏ.,வாக விரும்புகின்றனர். ஆனால் சரத், சாகசங்கள் செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்.
இது குறித்து, அவர் கூறியதாவது:
மூவர்ண தேசிய கொடி, 140 கோடி இந்தியர்களின் சக்தி. ஒருமைப்பாட்டின் அடையாளம். சாகசங்கள் செய்வதில் எனக்கு எப்போதும் ஆர்வம் அதிகம். பொங்கி வரும் அலைகளை சமாளித்து, எதிர் நீச்சல் போட்டு கடலின் ஆழத்துக்கு சென்று, தேசிய கொடியை விரித்த அந்த நொடி, என் வாழ்க்கையில் மகத்துவமான நேரமாக இருந்தது. அது, நெகிழ்ச்சியான தருணம்.
வன விலங்குகள் பாதுகாப்பில், எனக்குள்ள ஆர்வம், சாகச விளையாட்டுகளில் எனக்கு இருந்த அனுபவமே, இந்த சாதனைக்கு என்னை ஊக்கப்படுத்தியது. இந்திய பாதுகாப்பு படையினர் உதவியுடன் நாங்கள் சாதனையை செய்தோம். இதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
