/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரமேஷ் ஜார்கிஹோளி உட்பட மூவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு
/
ரமேஷ் ஜார்கிஹோளி உட்பட மூவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு
ரமேஷ் ஜார்கிஹோளி உட்பட மூவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு
ரமேஷ் ஜார்கிஹோளி உட்பட மூவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு
ADDED : ஏப் 16, 2025 08:45 AM

பெங்களூரு : கர்நாடக கூட்டுறவு வங்கியில் 439 கோடி ரூபாய் கடன் வாங்கிய பா.ஜ., - எம்.எல்.ஏ., ரமேஷ் ஜார்கிஹோளி உட்பட மூன்று பேர் மீதான குற்றப்பத்திரிகையை, விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய கர்நாடக உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பெலகாவியில், சவுபாக்யா லட்சுமி சுகர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக எம்.எல்.ஏ., ரமேஷ் ஜார்கிஹோளி, இயக்குனர்கள் வசந்த் வி.பாட்டீல், சங்கர் பாவடே ஆகியோர் இருந்தனர்.
ரூ.439 கோடி
இவர்கள், கர்நாடகா கூட்டுறவு வங்கியில் இருந்து, நிறுவனத்தை மேம்படுத்துவதாக கூறி, 439 கோடி ரூபாய் கடன் வாங்கினர். சிறிது காலத்துக்கு பின், மூவரும் அப்பதவியில் இருந்து ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து, வங்கி விதிமுறைப்படி, கடனை அடைக்காமல் ராஜினாமா செய்தது தவறு என்று வங்கி பொது மேலாளர் ராஜண்ணா, விஸ்வேஸ்வர்புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கை விசாரித்தனர். பின், இவ்வழக்கை சி.ஐ.டி.,க்கு மாற்றி, மாநில அரசு உத்தரவிட்டது.
இதற்கிடையில், தங்கள் மீது தொடரப்பட்ட கிரிமினல் வழக்கை ரத்து செய்ய கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மூவரும் மனு தாக்கல் செய்திருந்தனர். இம்மனு மீது, நீதிபதி பிரதீப் சிங் யெரூர் முன் விசாரணை நடந்து வந்தது.
விசாரணையின் போது நீதிபதி, 'போலீசாரின் குற்றப்பத்திரிகையில், ரமேஷ் ஜார்கிஹோளி குற்றமற்றவர் என்று உள்ளதா அல்லது குற்றவாளி என்று குறிப்பிட்டு உள்ளதா' என்று கேட்டார்.
குற்றவாளி
அரசு தரப்பு வக்கீல், 'இவ்வழக்கு தொடர்பாக 2,000 பக்கத்துக்கு குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த வாரத்திற்குள் தாக்கல் செய்யப்படும். அதில், அந்த மூவரும் குற்றவாளி என குறிப்பிடப்பட்டு உள்ளது' என்றார்.
இதற்கு ஆட்சேபனை தெரிவித்த மனுதாரர்கள் வக்கீல், 'நிறுவனத்தின் இயக்குனர்களாக இருந்த மூவரும், ராஜினாமா செய்துவிட்டனர். ஆனால் போலீசில் அளித்த புகாரில், வங்கியில் இருந்து வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல், ராஜினாமா செய்தது தவறு. கடனை முழுதாக அடைக்கும் வரை, அவர்கள் இயக்குனர்களாக தொடர வேண்டும்' என்று குறிப்பிட்டு உள்ளனர். மனுதாரர்களோ, கடன் தொகையை அடைப்பதற்கு நாங்களே பொறுப்பு என்று கடன் ஒப்பந்தத்தில் உறுதி அளித்துள்ளனர்' என்றார்.
இவ்வழக்கு விசாரணை நேற்று ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதி பிரதீப் சிங் யெரூர் கூறுகையில், ''இவ்வழக்கு தொடர்பான சி.ஐ.டி., விசாரணையின் போது, மனுதாரர்கள் பங்கேற்று ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். விசாரணையும் முடிந்து விட்டது.
''குற்றப்பத்திரிகை தயாராக இருப்பதாக கூறியுள்ள சி.ஐ.டி.,யினர், விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம். அதே வேளையில் இது தொடர்பாக அடுத்த உத்தரவு வரும் வரை, விசாரணை நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க கூடாது. இவ்வழக்கு விசாரணை ஜூன் 3ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது,'' என்றார்.

