/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
உயிரிழந்த ஊழியரின் சகோதரருக்கு பணி கருணை அடிப்படையில் வழங்க உத்தரவு
/
உயிரிழந்த ஊழியரின் சகோதரருக்கு பணி கருணை அடிப்படையில் வழங்க உத்தரவு
உயிரிழந்த ஊழியரின் சகோதரருக்கு பணி கருணை அடிப்படையில் வழங்க உத்தரவு
உயிரிழந்த ஊழியரின் சகோதரருக்கு பணி கருணை அடிப்படையில் வழங்க உத்தரவு
ADDED : ஆக 27, 2025 10:56 PM
பெங்களூரு: 'அரசு ஊழியர் பணியில் இருக்கும் போது இறந்தால், கருணை அடிப்படையில் வேலை பெற, அவரது சகோதரருக்கு உரிமை உள்ளது' என, கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விஜயபுரா மாவட்டம், முத்தேபிஹாளின், அரசநாளா கிராமத்தில் வசித்தவர் வீரேஷ் மன்டப்பா. கல்யாண கர்நாடகா போக்குவரத்து கழகத்தில் பணியில் இருந்தார். இவரது மனைவி சுனந்தா. தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. கடந்த 2022 ஏப்ரல் 9ம் தேதி, சுனந்தா காலமானார். வீரேஷ் மன்டப்பா, தன் தாய் மற்றும் தம்பி சங்கண்ணாவை பராமரித்து வந்தார்.
கடந்தாண்டு வீரேஷ் மன்டப்பா இறந்து விட்டார். பணியில் இருக்கும் போதே அவர் இறந்ததால், கருணை அடிப்படையில் தனக்கு வேலை தரும்படி, கல்யாண கர்நாடகா போக்குவரத்து கழகத்திடம், சங்கண்ணாவும், அவரது தாய் மாந்தவ்வாவும் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் இறந்தவரின் சகோதரருக்கு, கருணை அடிப்படையில் வேலை பெறும் உரிமை இல்லை என, கூறி அவர்களின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது.
இது குறித்து, கேள்வி யெழுப்பி தாயும், மகனும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனு நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ் முன்னிலையில், நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. வாதங்களை கேட்டறிந்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
அரசு ஊழியர் வீரேஷ் மன்டப்பாவின் மனைவி முன்பே இறந்துவிட்டார். தம்பதிக்கு குழந்தை இல்லை. தன் தாய் மற்றும் சகோதரரை வீரேஷ் மன்டப்பா காப்பாற்றி வந்துள்ளார். இப்போது அவர் காலமானதால், அவரது சகோதரர் சங்கண்ணாவுக்கு, கருணை அடிப்படையில் வேலை கேட்கும் உரிமை உள்ளது.
இறந்த ஊழியரின் குடும்பத்தினருக்கு, பொருளாதார பிரச்னை ஏற்பட கூடாது என்ற நோக்கில், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் வேலை அளிக்கப்படுகிறது.
தற்போது வேலை வாய்ப்புக்கு உரிமை கொண்டாட, வீரேஷ் மன்டப்பாவுக்கு மனைவியோ, பிள்ளைகளோ இல்லை. தாய் மற்றும் சகோதரரை பராமரித்துள்ளார்.
தற்போது அவர் இறந்ததால், அவரது சகோதரருக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும். அவரது தகுதிக்கு தக்கபடி வேலை தர வேண்டும். ஒருவேளை இவர், தன் தாயை நன்றாக பார்த்துக்கொள்ளா விட்டால், பணி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.