சிறையில் பவித்ரா கவுடாவுக்கு நைஜீரிய கைதிகள் தொல்லை
சிறையில் பவித்ரா கவுடாவுக்கு நைஜீரிய கைதிகள் தொல்லை
UPDATED : அக் 07, 2026 12:08 AM
ADDED : அக் 07, 2026 12:06 AM
பெங்களூரு: சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில், சிறையில் உள்ள பவித்ரா கவுடாக்கு, நைஜீரிய கைதிகள் தொல்லை கொடுப்பதால், உயர் நீதிமன்றம் கோபம் அடைந்துள்ளது.
சித்ரதுர்காவின் ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், அவருக்கு நெருக்கமான பவித்ரா கவுடா கைதாகி, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் உயரதிகாரிகள் சிறையில் சோதனை நடத்திய போது, மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டன. எனவே, பவித்ரா கவுடா சமீபத்தில், 32 கைதிகள் உள்ள அறைக்கு மாற்றப்பட்டார்.
இங்குள்ள நைஜீரிய பெண் கைதிகளால், பவித்ரா கவுடா தொந்தரவுக்கு ஆளாகி உள்ளார். இவரது உடமைகளை, சக கைதிகள் பலவந்தமாக பயன்படுத்துகின்றனர்; எப்போதும் கூச்சலிடுகின்றனர்; நிம்மதியாக உறங்க முடியவில்லை என, தன் வக்கீல்கள் மூலமாக, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
நீதிமன்றமும் செப்டம்பர் 7ம் தேதியன்று, பவித்ரா கவுடாவை வேறு அறைக்கு மாற்றும்படி உத்தரவிட்டது. உத்தரவிட்டு ஒரு மாதமாகியும், சிறை அதிகாரிகள் வேறு அறைக்கு மாற்றவில்லை.
இது தொடர்பாக, அவர் மீண்டும் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். இதை நேற்று விசாரித்த நீதிமன்றம், சிறையில் நைஜீரிய கைதிகளின் தொந்தரவுக்கு, அதிருப்தி தெரிவித்தது. பவித்ரா கவுடாவை வேறு அறைக்கு மாற்றி, அறிக்கை அளிக்கும்படி சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
