/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கடலைக்காய் திருவிழா பசவனகுடியில் இன்று துவக்கம்
/
கடலைக்காய் திருவிழா பசவனகுடியில் இன்று துவக்கம்
ADDED : நவ 17, 2025 02:31 AM
பசவனகுடி: பசவனகுடியில் வரலாற்று பிரசித்தி பெற்ற கடலைக்காய் திருவிழா இன்று துவங்குகிறது. ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி திருவிழாவை துவக்கி வைக்கிறார்.
ஆண்டு தோறும், கன்னட கார்த்திகை மாதத்தின் கடைசி திங்கட்கிழமையில், பெங்களூரின் பசவனகுடியில் கடலைக்காய் திருவிழா நடக்கும். இது பல நுாறு ஆண்டுகள் வரலாறு கொண்டது.
பொதுவாக மூன்று நாட்கள் வரை, திருவிழா நடப்பது வழக்கம். ஆனால் இம்முறை ஐந்து நாட்கள் நடத்தப்படும். இன்று முதல் நவம்பர் 21 வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் ராமலிங்கரெட்டியும், பசவனகுடி பா.ஜ., - எம்.எல்.ஏ., ரவி சுப்ரமண்யாவும் இன்று காலை 10:30 மணிக்கு கடலைக்காய் திருவிழாவை துவக்கி வைக்கின்றனர். ஐந்து காளை மாடுகளுக்கு கடலைக்காய் செடியை சாப்பிட வைப்பதன் மூலம், திருவிழா துவங்கும்.
ஏற்கனவே வியாபாரிகள், கடைகளை திறந்து விதவிதமான கடலைக்காய்களை விற்பனைக்கு வைத்துள்ளனர். வெளி மாநிலங்களில் இருந்தும், வியாபாரிகள் வந்துள்ளனர்.
திருவிழாவில், பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. எந்த கடையிலாவது பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தால் கடையை அகற்றுவதாக, அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
திருவிழாவை முன்னிட்டு, நந்தீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. பசவனகுடி சுற்றுப்பகுதிகளின், ஒன்பது சாலைகளில் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் வருகை தருவதால், 900 போலீசார் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர்.

