பெங்., – லக்னோ விமானம் கடத்தல் புரளியால் தரையிறக்கம்
பெங்., – லக்னோ விமானம் கடத்தல் புரளியால் தரையிறக்கம்
UPDATED : நவ 09, 2026 12:00 AM
ADDED : நவ 08, 2026 05:14 PM
பெங்களூரு: பெங்களூரில் இருந்து லக்னோவுக்கு சென்ற இண்டிகோ விமானம் கடத்தப்படும் என்ற கடிதத்தால், புறப்பட்ட 30 நிமிடங்களில் மீண்டும் பெங்களூரு திரும்பியது.
பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லக்னோவுக்கு இண்டிகோ விமானம் நேற்று முன்தினம் மாலை 5:50 மணிக்கு 178 பயணியருடன் புறப்பட்டது. விமானம் பறக்க துவங்கிய 30 நிமிடத்தில், பயணி ஒருவர் கழிவறைக்கு சென்றார். அங்கு கடிதம் ஒன்று இருப்பதை கண்டார். அதில், ‘இந்த விமானம் சரியாக மாலை 6:30 மணிக்கு கடத்தப்படும். இதை அலட்சியப்படுத்தினால், விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.
அதிர்ச்சியடைந்த பயணி, விமான பணியாளர்களிடம் விபரம் தெரிவித்தார். அவர்களும், விமானியிடம் கூற, அவர் பெங்களூரு விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். அவர்களின் அறிவுறுத்தலின்படி, விமானத்தை மீண்டும் பெங்களூருக்கே திருப்பினார். விமானம் வருவதற்குள், விமான நிலைய ஓடுபாதையில் முழு அவசர நிலை அறிவிக்கப்பட்டது.
விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணியர் அனைவரும் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர். சி.ஐ.எஸ்.எப்., எனும் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன், விமானம் மற்றும் பயணியரின் உடமைகளை சோதனை நடத்தினர்.
சோதனை முடிவில் விமானத்தில் சந்தேகத்துக்கு இடமான பொருட்கள் சிக்காததால், அந்த மிரட்டல் புரளி என்பதை உறுதி செய்தனர். பாதுகாப்பு அனுமதி கிடைத்ததும், அதே விமானம் நள்ளிரவு மீண்டும் லக்னோவுக்கு புறப்பட்டு சென்றது.
விமானத்திற்குள் இருந்த பயணியரில் ஒருவர் தான், இந்த கடிதத்தை எழுதியிருக்க வேண்டும் என்று விமான நிலைய போலீசார், பாதுகாப்பு அமைப்பினர் சந்தேம் அடைந்து உள்ளனர். விமானத்தில் பயணித்த அனைத்து பயணியர் பட்டியலை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
