வயதான தாயை வனத்தில் விட்டு சென்ற மகன்: நடவடிக்கை எடுக்கும்படி மக்கள் வலியுறுத்தல்
வயதான தாயை வனத்தில் விட்டு சென்ற மகன்: நடவடிக்கை எடுக்கும்படி மக்கள் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 03, 2026 10:55 PM

பெலகாவி: நோயால் பாதிக்கப்பட்ட வயதான தாயை, ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் மகன் விட்டு சென்ற சம்பவம், மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பெலகாவி மாவட்டம், ராமதுர்கா தாலுகாவின், சாலொள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கமலம்மா, 88. கணவரை இழந்த இவர், தன் மகன் சந்தோஷுடன் வசிக்கிறார். வயது முதிர்வால் நோய் ஏற்பட்டு கமலம்மா அவதிப்பட்டார்.
தாயை பராமரிப்பதை சுமையாக கருதிய மகன் சந்தோஷ், நேற்று முன்தினம், இரவு 10:00 மணிக்கு, சவதத்தி தாலுகாவின், முனவள்ளி கிராமம் அருகில் உள்ள வனப்பகுதிக்கு, தாயை அழைத்து வந்தார்.
அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில், விட்டு விட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
குன்றின் அருகில் தன் நிலையை நினைத்து, இயலாமையில் அழுதபடி விழுந்து கிடந்தார். நேற்று காலையில், அவ்வழியாக சென்ற சிலர், மூதாட்டியை கவனித்து விசாரித்த போது, மகன் தன்னை விட்டு சென்றதை கூறினார்.
இவரது மகன் சந்தோஷ் கட்டி, கே.எஸ்.ஆர்.டி.சி.,யின் சங்கேஷ்வரா டிப்போவில் ஊழியராக பணியாற்றுகிறார். பொறுப்பான பதவியில் உள்ள அவர், தன் தாயை வனத்தில் அனாதரவாக விட்டு சென்றதை, பலரும் கண்டித்தனர்.
கொடூர குணம் கொண்ட அவர் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி, போலீசாரிடம் வலியுறுத்தினர். தற்போது மூதாட்டிக்கு அப்பகுதியினர் உணவு, நீர் கொடுத்து பராமரிக்கின்றனர்.
போலீசார் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளனர். மூத்த குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக, மத்திய, மாநில அரசுகள் கடுமையான சட்டங்களை வகுத்துள்ளன.
ஆனால், சட்டத்தை பற்றிய பயமின்றி, தாய், தந்தையை கொடுமைப்படுத்தும் சம்பவங்கள், ஆங்காங்கே நடப்பது வருந்தத்தக்க விஷய மாகும்.
