எஸ்.ஐ.ஆர்., பணி காலக்கெடு நீட்டிப்பு கோரிய மனு தள்ளுபடி
எஸ்.ஐ.ஆர்., பணி காலக்கெடு நீட்டிப்பு கோரிய மனு தள்ளுபடி
ADDED : ஜூலை 29, 2026 02:53 AM
பெங்களூரு: கர்நாடகாவில் நடந்து வரும் எஸ்.ஐ.ஆர்., பணியின் காலக்கெடுவை, மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க கோரிய பொதுநல மனுவை, கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கர்நாடகாவில் எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடந்து வருகின்றன. இப்பணியின் காலகட்டத்தை ஒன்று முதல் மூன்று மாதங்கள் நீட்டிக்க வேண்டும் என்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இலக்கியவாதி தேவனுார் மகாதேவா, வரலாற்றாளர் ராமசந்திர குஹா, ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் வம்பட்கெரே, எழுத்தாளர் சபிஹா பூமிகவுடா ஆகியோர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தனர்.
இம்மனு, தலைமை நீதிபதி விபு பக்ரு, நீதிபதி ஹேமலேகா முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பு வக்கீல் விக்ரம்: எஸ்.ஐ.ஆர்., பணியில், பி.எல்.ஓ.,க்கள் எனும் வட்டார அலுவலர்களுக்கு, 10 நாட்கள் மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இப்பணியில் அங்கன்வாடி ஊழியர்கள், ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், தங்கள் பெயரை சேர்க்க ஆக., 5 முதல் செப்., 4ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதே கொள்கை தான் பீஹாரிலும் பின்பற்றப்பட்டு, தேர்தல் நடத்தப்பட்டது. கர்நாடகாவில் 2028ல் தான் தேர்தல் நடக்க உள்ளது. எனவே, கர்நாடகாவிற்கு கால அவகாசம் அளிக்க வேண்டும். எஸ்.ஐ.ஆர்., திட்டத்தில் நகர்ப்புற மக்கள் மட்டுமின்றி, கிராமப்புற மக்களும் அடங்குவர். அவர்களுக்கு உரிய அவகாசம் வழங்க வேண்டும்.
தேர்தல் ஆணைய தரப்பு வக்கீல்:
வரைவு பட்டியல் வெளியிடுவதற்கு முன், அனைத்தையும் செய்து முடிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் கூறுகின்றனர். தேவைப்பட்டால் ஆணையம் காலக்கெடு நீட்டிக்கும். இந்த காலக்கெடு குறித்து இந்திய தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. எஸ்.ஐ.ஆர்., செயல்முறையை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டால், ஆணையம் தேவையான நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறி உள்ளது.
வரைவு பட்டியல் வெளியிடுவதற்கு முன், அதில் பெயர் இல்லாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது சரியல்ல. திருத்தப்பட்ட வரைவு பட்டியல் வெளியிட்ட பின்னரே, நோட்டீஸ் அனுப்பப்படும்.
அரசு தலைமை வக்கீல் சசிகரன் ஷெட்டி:
தேர்தல் ஆணையத்துக்கு, அமைச்சரவை சில ஆலோசனைகளையும், பரிந்துரைகளையும் வழங்கி உள்ளது. இதற்கு தேர்தல் ஆணையம் இதுவரை பதிலளிக்கவில்லை. மக்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். காலக்கெடு விதிக்காமல், மக்களின் வசதிக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் கோரப்பட்டு உள்ளது.
மனுதாரர் தரப்பு வக்கீல் விக்ரம்:
உரிய வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றால், அரசின் நல திட்டங்களை பெற முடியாது என்று முதல்வர் சிவகுமார், ஊடகத்தினரிடம் தெரிவித்து உள்ளார்.
தலைமை நீதிபதி விபு பக்ரு, தன் உத்தரவில் கூறியதாவது:
நீங்கள், அனைத்தையும் கற்பனை செய்து கொண்டுள்ளீர்கள். உங்களுக்கு என்ன விதமான வழிகாட்டுதல் வேண்டும். மனுதாரரின் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட வேண்டும். இந்த மனு எஸ்.ஐ.ஆர்., பணியை கேள்விக்கு உட்படுத்தி உள்ளது. இதில் எழும் சிக்கல்களை தேர்தல் ஆணையம் தீர்க்கவில்லை என்று கூற முடியாது.
எஸ்.ஐ.ஆர்., காலக்கெடு தொடர்பான விஷயத்தில் முடிவெடுக்கும் அதிகாரம், தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது.
வாக்காளர்களின் பிரச்னைகள் குறித்து மாநில அரசு, தேர்தல் ஆணையத்திடம் பல மனுக்களை சமர்ப்பித்து உள்ளது. இதில் தேர்தல் ஆணையம் உரிய கவனம் செலுத்தவில்லை என்று கூறுவது சரியல்ல.
தற்போது எஸ்.ஐ.ஆர்., பிரச்னைகள், உச்ச நீதிமன்ற பரிசீலனையில் உள்ளன. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் தன் உத்தரவில் கூறினார்.
