/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரில் குப்பை சேகரிப்புக்கு மையங்கள் அமைக்க திட்டம்
/
பெங்களூரில் குப்பை சேகரிப்புக்கு மையங்கள் அமைக்க திட்டம்
பெங்களூரில் குப்பை சேகரிப்புக்கு மையங்கள் அமைக்க திட்டம்
பெங்களூரில் குப்பை சேகரிப்புக்கு மையங்கள் அமைக்க திட்டம்
ADDED : அக் 07, 2025 04:49 AM

பெங்களூரு: சாலைகளில் குப்பை வீசப்படுவதைத் தடுக்க, நகரில் 70க்கும் மேற்பட்ட குப்பை சேகரிக்கும் மையங்களை அமைக்க உள்ளதாக பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனத்தின் தலைவர் கரீகவுடா கூறி உள்ளார்.
பெங்களூரில் தினமும் காலையில் வீடு, வீடாக மாநகராட்சி ஊழியர்கள் குப்பை சேகரித்து வருகின்றனர். இருப்பினும், சாலை ஓரங்களில், பலரும் குப்பையை வீசிவிட்டுச் செல்கின்றனர். இதனால், பிரதான சாலைகள் கூட குப்பையாக காட்சி அளிக்கின்றன. இதை தடுக்க மாநகராட்சி தரப்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நகரின் சாலையோரங்களில் குப்பை கொட்டப்படும் இடங்களை அடையாளம் கண்டு, சிறிய அளவிலான குப்பை சேமிக்கும் மையங்களை நிறுவ திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனத்தின் தலைவர் கரீகவுடா கூறியதாவது:
சாலைகளில் குப்பை வீசப்படுவதைத் தடுக்க, நகரில் 70க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான குப்பை சேகரிக்கும் மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம். குப்பை அதிகமாக உள்ள இடங்களுக்கு முன்னுரிமை அளித்து நிறுவப்படும்.
இந்த மையங்களில் குப்பைகள் தரம் பிரிக்கப்படும். இந்த மையங்கள் அமைப்பதற்கான இடங்களை அடையாளம் காணுவதற்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அடுத்த மூன்று மாதங்களுக்குள் நிறுவ வாய்ப்பு உள்ளது. காலையில் இருந்து மாலை வரை இயங்கும். இரவில் செயல்படாது.
பெங்களூரில் உள்ள முருகேஷ்பாளையாவில், 2018ல் முதல் முறையாக குப்பை சேகரிக்கும் மையம் நிறுவப்பட்டது. பின்னர், மற்ற பகுதிகளிலும் நிறுவுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆனால், செய்ய முடியவில்லை.
தற்போது, குப்பை அதிகம் சேருவதால், மையங்கள் அமைக்கப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்கு கிரேட்டர் பெங்களூரு ஆணையமும் ஒப்புதல் அளித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.