மூளை செயலிழந்தவர் உறுப்புகள் தானம் :'ஜீரோ டிராபிக்' வசதி செய்த போலீசார்
மூளை செயலிழந்தவர் உறுப்புகள் தானம் :'ஜீரோ டிராபிக்' வசதி செய்த போலீசார்
ADDED : ஜூலை 19, 2026 11:23 PM
தார்வாட்: ரயில் நிலையத்தில் எதிர்பாராமல் கீழே விழுந்து காயமடைந்து, மூளை செயலிழந்த நபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதற்காக, பாகல்கோட்டிலிருந்து, பெலகாவி செல்ல வசதியாக, 'ஜீரோ டிராபிக்' வசதியை போலீசார் ஏற்படுத்தினர்.
பாகல்கோட் மாவட்டம், முதோல் தாலுகாவின் ஜுன்னுாரா கிராமத்தில் வசித்தவர் துன்டப்பா கெஞ்சகன்னவரா, 55. இவர் நேற்று முன் தினம் காலை, தார்வாட் ரயில் நிலையத்தில் கீழே விழுந்தார்.
காயமடைந்த அவர், சிகிச்சைக்காக தார்வாடின் எஸ்.டி.எம்., மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரது நிலைமை மோசமாக இருந்ததால், கூடுதல் சிகிச்சைக்காக பாகல்கோட்டின் குமாரேஸ்வரா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
டாக்டர்கள் குழுவினரும், துன்டப்பாவை காப்பாற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி, நேற்று அவரது மூளை செயல் இழந்தது.
துக்கமான நேரத்திலும், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய, குடும்பத்தினர் முன் வந்தனர். உடல் உறுப்புகளை தானம் பெற, அவரை பாகல்கோட்டில் இருந்து, இறந்தவர் உடலை, பெலகாவியின் கே.எல்.இ., மருத்துவனைக்கு மாற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர்.
மூளை செயலிழந்த நோயாளியின் இதய துடிப்பு, ரத்த அழுத்தத்தை இயல்பு நிலையில் வைத்து கொண்டு மருத்துவமனைக்கு செல்வது, டாக்டர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது.
போலீஸ் துறையின் உதவியை கேட்டனர். உடனடியாக செயல்பட்ட மாவட்ட எஸ்.பி., உட்பட இரண்டு மாவட்டங்களின் போலீசாரும், நோயாளியை அழைத்து சென்ற ஆம்புலன்ஸ், எந்த போக்குவரத்து இடையூறும் இல்லாமல், பாகல்கோட்டில் இருந்து, பெலகாவியின் கே.எல்.இ., மருத்துவமனைக்கு சென்றடைய வசதியாக, 'ஜீரோ டிராபிக்' வசதி செய்து கொடுத்தனர்.
தற்போது கே.எல்.இ., மருத்துவமனையில், துன்டப்பாவின் உடல் உறுப்புகள், வேறு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன.
