ADDED : ஜூலை 19, 2026 11:24 PM

உடுப்பி: 'ஹைட்ரோ' கஞ்சா எனும் உயர் ரக கஞ்சாவை, விற்பனை செய்த மூவர் கைது செய்யப்பட்டனர்.
உடுப்பி மாவட்டம் ஷிவள்ளி பகுதியில், போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக, உடுப்பி நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மால்பே போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமசந்திரா நாயக் தலைமையிலான போலீசார் ஷிவள்ளி பகுதியில் நேற்று சோதனை நடத்தினர்.
சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அந்த வாலிபரிடம் சோதனை மேற்கொண்டதில், அவரது 'பேன்ட்' பாக்கெட்டில், ஹைட்ரோ கஞ்சா இருப்பது தெரிந்தது. அவரிடம் போலீசார் உரிய முறையில் விசாரித்தனர்.
அப்போது, அவர் ஹைட்ரோ கஞ்சா விற்பனை செய்வதை ஒப்புக்கொண்டார். அவர், கார்கலா பகுதியை சேர்ந்த ஆகாஷ், 20, என்பது தெரிந்தது. அவர் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு உறுதுணையாக செயல்பட்ட அவரது கூட்டாளிகளான விஜய், 36, சமஸ், 24, ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து, 3.30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 1.50 கிலோ ஹைட்ரோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் எங்கிருந்து கஞ்சா வாங்கி விற்பனை செய்கின்றனர் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
