ADDED : செப் 09, 2026 03:52 AM

பெங்களூரு: 'சுழுந்தீ' நாவலை தெலுங்கில் சிறப்பாக மொழிபெயர்த்த, மொழி பெயர்ப்பாளர் பொள்ளி ராமசாமி ரகுபதிக்கு, விருது வழங்கப்பட உள்ளது.
பெங்களூரில் உள்ள திராவிட மொழி பெயர்ப்பாளர்கள் சங்கம் சார்பில், ஆண்டிற்கு ஒரு முறை, சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருது வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான மொழி பெயர்ப்பாளர் விருது, பொள்ளி ராமசாமி ரகுபதிக்குவழங்கப்பட உள்ளது.
புகழ்பெற்ற தமிழ் கவிஞரும், எழுத்தாளருமான, ரா.முத்துநாகு எழுதிய சுழுந்தீ நாவலை, தெலுங்கில் சிறப்பாக மொழி பெயர்த்து, தெலுங்கு மொழி பேசும் வாசகர்களிடம் சேர்த்ததை கவுரவிக்கும் வகையில், பொள்ளி ராமசாமி ரகுபதி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வரும், 26ம் தேதி பெங்களூரில் உள்ள கன்னட பவன் நயனா அரங்கில் நடக்கும் நிகழ்ச்சியில், கன்னட வளர்ச்சி ஆணைய தலைவர் புருஷோத்தம் பிளிமனே, பொள்ளி ராமசாமி ரகுபதிக்கு, 11,111 ரூபாய் ரொக்கம், சான்றிதழ், நினைவு சின்னம் வழங்கி கவுரவிக்கிறார்.
''திராவிட மொழிகளுக்கு இடையே இலக்கிய உறவை மேலும் வலுப்படுத்துவதுடன், மொழிபெயர்ப்பாளர்களுக்கு புதிய ஊக்கத்தையும் அளிக்க வேண்டும் என்பதே, திராவிட மொழி பெயர்ப்பாளர்கள் சங்க குறிக்கோள்,'' என, சங்கத்தின் தலைவர் டாக்டர் சுஷ்மா சங்கர் கூறினார்.
