மதமாற்றம், பசுவதை தடை சட்டம் திரும்ப பெற அரசுக்கு அழுத்தம்
மதமாற்றம், பசுவதை தடை சட்டம் திரும்ப பெற அரசுக்கு அழுத்தம்
UPDATED : நவ 13, 2026 03:52 AM
ADDED : நவ 12, 2026 11:54 PM

பெங்களூரு: பா.ஜ., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கட்டாய மதமாற்றம், பசுவதை தடை சட்டத்தை திரும்ப பெற அரசுக்கு, சிறுபான்மை சமூகம் அழுத்தம் கொடுக்கிறது. சட்டத்தை திரும்ப பெற்றால், மாநிலம் முழுதும் போராட்டம் நடத்துவோம் என பா.ஜ., எச்சரித்துள்ளது.
கர்நாடகாவில் பா.ஜ., ஆட்சியில் எடியூரப்பா முதல்வராக இருந்த போது, 2020ம் ஆண்டு பசுவதை தடுப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம் தொடர்பான மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டம், 2021ல் அமலுக்கு வந்தது. பசவராஜ் பொம்மை முதல்வராக இருந்த போது கட்டாய மதமாற்ற தடை சட்ட மசோதா, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறிய பின், 2022ல் இருந்து அமலுக்கு வந்தது.
இரண்டு சட்டங்கைளை மீறி செயல்படுவோருக்கு கடும் சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது
இந்த இரு சட்டங்களுக்கும் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இரு சட்டங்களும் திரும்ப பெறப்படும் என்றும் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்து இருந்தது.
ஆனால், காங்கிரஸ் ஆட்சி அமைந்து மூன்றரை ஆண்டுகள் ஆகியும் சட்டங்களை திரும்ப பெற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாநில அரசை கண்டித்து, பெங்களூரு சுதந்திர பூங்காவில் சிறுபான்மை சமூகத்தினர் உள்ளிட்டோர் நேற்று போராட்டம் நடத்தினர். மாநில காங்கிரஸ் தலைவர் ஹரிபிரசாத்தை சந்தித்து, இரண்டு சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதை ஏற்று கொண்ட ஹரிபிரசாத்தும், பெலகாவியில் நடக்க உள்ள குளிர்கால கூட்டத்தொடரின் போது இரண்டு சட்டங்களையும் திரும்ப பெற அரசுக்கு அழுத்தம் கொடிக்க உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
இதற்கு, பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் எம்.எல்.சி., ரவிகுமார் கூறுகை யில், ''நாங்கள் ஆட்சியில் இருந்த போது அனைத்து சமூகத்தினர் கருத்தையும் கேட்டு தான் கட்டாய மதமாற்றம், பசுவதை தடை சட்டத்தை கொண்டு வந்தோம்.
''இப்போது சட்டங்களை திரும்ப பெற அரசு முயற்சிக்க கூடாது. அப்படி செய்தால் மாநிலம் முழுதும் பா.ஜ., சார்பில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்,'' என்றார்.
