/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'ஓட்டு மோசடி விவகாரத்தில் சிறை உறுதி'
/
'ஓட்டு மோசடி விவகாரத்தில் சிறை உறுதி'
ADDED : அக் 25, 2025 05:17 AM

பெங்களூரு: “ஆலந்த் தொகுதி ஓட்டு மோசடியில் ஈடுபட்டவர்கள் விரைவில் சிறையில் அடைக்கப்படுவர்,” என, மாநில தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்தார்.
கலபுரகி மாவட்டம், ஆலந்த் தொகுதியில் ஓட்டு மோசடி நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பிரியங்க் கார்கே நேற்று பெங்களூரில் கூறியதாவது:
ஆலந்த் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இருந்து ஒரு வாக்காளரை நீக்க 80 ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது, எஸ்.ஐ.டி., விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது ஒரே ஒரு உண்மை மட் டுமே வெளிவந்துள்ளது. முழு உண்மைகளும்அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் வெளியாகும். இதில் தொடர்புடையவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்படுவர்.
ஓட்டு மோசடி குறித்த ராகுலின் குற்றச்சாட்டுகள் நிரூபணமாகிறது. பா.ஜ., மற்றும் தேர்தல் கமிஷனிடம் பல கேள்விகளை கேட்போம்.பா.ஜ.,வின் ஓட்டு மோசடி முயற்சிகள் அம்பலமாகும்.
பீஹார், மஹாதேவப்புரா, ஆல்ந்த் உள்ளிட்ட இடங்களில் நடந்த ஓட்டு மோசடிகளை வைத்து பார்த்தால், ஒரு கட்சியின் பிடியில் தேர்தல் கமிஷன் சிக்கி இருப்பது தெரிகிறது. தேர்தல்கள் நியாயமான முறையில் நடக்க வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ்., அணி வகுப்பு குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. எனவே, இதைப்பற்றி எதுவும் கூற விரும்பவில்லை. நீதிமன்றத்தின் உத்தரவை கடைபிடிப்போம். இந்த விவகாரத்தில் ராகுல், மல்லிகார்ஜுன கார்கே, சித்தராமையா,சந்தோஷ் லாட், தினேஷ் குண்டுராவ் என அனைவரும் எனக்கு ஆதரவாக உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

