தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் நல்லாசிரியர் விருது வழங்க பரிசீலனை
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் நல்லாசிரியர் விருது வழங்க பரிசீலனை
ADDED : செப் 12, 2026 11:46 PM

பெங்களூரு: ''தனியார் பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கும், மாநில அளவிலான ஆசிரியர் விருது கொடுப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது,'' என, பள்ளி கல்வி எழுத்தறிவித்தல் துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார்.
பெங்களூரில் தனியார் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மது பங்காரப்பா பேசியதாவது:
தனியார் பள்ளிகள் சங்கம் சமர்ப்பித்த பல கோரிக்கைகளை அரசு பரிசீலித்து வருகிறது. பெங்களூரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருதி, பள்ளி நேரத்தை மாற்றும்படி அவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, பல துறைகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
எம்.எல்.ஏ., புட்டண்ணா தலைமையிலான குழுவினர், தனியார் பள்ளிகளின் வாடகை படியை புதுப்பிப்பது, பெங்களூரு நகர அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் வீட்டு வாடகை படியை, பெங்களூரு கிராமப்புற மாவட்ட ஆசிரியர்களுக்கும் நீட்டிப்பது குறித்து பரிந்துரை வழங்கியுள்ளது. இது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும்.
தனியார் பள்ளிகள், அரசுக்கு பணம் செலுத்த தயாராக இருப்பதாகவும், அரசு பாடப்புத்தகங்களை வழங்கும்படி விடுத்துள்ள கோரிக்கை பரிசீலிக்கப்பட்டுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
