காவலர் தேர்வு குளறுபடிகள் பா.ஜ.,வுக்கு பிரியங்க் சவால்
காவலர் தேர்வு குளறுபடிகள் பா.ஜ.,வுக்கு பிரியங்க் சவால்
ADDED : ஆக 04, 2026 02:14 AM

பெங்களூரு: ''காவலர் தேர்வு வினாத்தாள் குழப்பங்கள் தொடர்பாக என்னை ராஜினாமா செய்ய சொல்பவர்கள், முதலில் 25 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க வேண்டும்,'' என உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்தார்.
கர்நாடகாவில் நேற்று முன்தினம் சிவில் போலீஸ் ஏட்டு பதவிகளுக்கு தேர்வு நடத்தப்பட்டது. சில தேர்வு மையங்களில், குழப்பம் ஏற்பட்டதால் தாமதமாக நடத்தப்பட்டது.
இதையடுத்து, எதிர்க்கட்சியினர், 'உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே, ராஜினாமா செய்ய வேண்டும்' என்று வலியுறுத்தினர்.
இதற்கு பதிலளித்து நேற்று பிரியங்க் கார்கே அளித்த பேட்டி:
விஜயபுராவில் ஒரு தேர்வு மையத்தில் வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களில் எண்கள் மாறுபட்டிருந்ததாக கூறி, தேர்வு எழுத வந்தவர்களில் சிலர், தேர்வு எழுதாமல், மையத்தில் இருந்து வெளியே சென்று போராட்டம் நடத்தினர்.
தேர்வு மையத்தை விட்டு வெளியேறினால், மீண்டும் உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது. தேர்வு எழுதிய பின், இந்த தவறை சுட்டி காண்பித்திருக்கலாம்.
போலீஸ் தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறி, என்னை ராஜினாமா செய்ய சொல்லும் எதிர்க்கட்சியினர், டில்லியில் ஜந்தர் மந்திரில் நடந்த போராட்டம் போன்று, முதலில் 25 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என்றால், அவர்கள் மீது தடியடி நடத்துவோம். அதன் பின்னரே, பதவி விலகுவேன்.
பா.ஜ., ஆட்சியில் இருந்தபோது முறைகேடு நடக்கவில்லையா? அப்படியென்றால், பசவராஜ் பொம்மையும், உள்துறை அமைச்சராக இருந்த அரக ஞானேந்திராவும் ஏன் ராஜினாமா செய்யவில்லை?
இயற்கை பேரிடர் காரணமாக தேர்வு எழுத முடியாமல் போனது இதுவே முதல் முறை. இத்தகைய சிக்கல் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது தேர்வு விதிகளில் குறிப்பிடவில்லை. இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
