சி.ஐ.டி., விசாரணை குழு தலைவராக ராகவேந்திரா ஹெக்டே நியமனம்
சி.ஐ.டி., விசாரணை குழு தலைவராக ராகவேந்திரா ஹெக்டே நியமனம்
ADDED : ஆக 04, 2026 02:13 AM

பெங்களூரு: கே.பி.எஸ்.சி., கால்நடை அதிகாரிகள் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட சி.ஐ.டி., விசாரணை குழுவின் தலைவராக ராகவேந்திரா ஹெக்டே நியமிக்கப்பட்டு உள்ளார்.
கர்நாடக அரசின் கால்நடை துறையில், 400 மருத்துவ அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை, கே.பி.எஸ்.சி., எனும் கர்நாடக பொது சேவை ஆணையம் வெளியிட்டது. பணிக்கு தேர்வானோர் பட்டியல், கடந்த 17ம் தேதி வெளியிடப்பட்டது.
தேர்வில் வெற்றி பெறாத 50க்கும் மேற்பட்ட தேர்வர்கள், பெங்களூரு விதான் சவுதா போலீசில் புகார் அளித்தனர். அதில், 'மருத்துவ அதிகாரி பணிக்கு தேர்வாகி உள்ள 60 சதவீதம் பேர், தலா 80 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளனர்' என குறிப்பிட்டிருந்தனர்.
தேர்வர்களிடம், சில இடைத்தரகர்கள் லஞ்சம் கேட்டதாக, கே.பி.எஸ்.சி., சார்பில் உதவி செயலர் வீனாவும், விதான் சவுதா போலீசில் புகார் செய்தார். இவ்விரு புகார்களின் அடிப்படையில், கே.பி.எஸ்.சி., முன்னாள் தலைவர் சிவசங்கரப்பா சாகூர் உட்பட சிலர் மீது வழக்கு பதிவானது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
விதான் சவுதா போலீசில் பதிவான இரு வழக்குகளையும், சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றி, டி.ஜி.பி., சலீம் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், சி.ஐ.டி., - டி.ஜி.பி., பிரணாப் மொஹந்தி, இவ்வழக்கை விசாரிக்கும் குழுவின் தலைவராக எஸ்.பி., ராகவேந்திர ஹெக்டேவை நியமித்து உத்தரவிட்டு உள்ளார்.
இதையடுத்து, கா ல்நடை மருத்துவர் முறைகேடு விசாரணை அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ளது. கர்நாடக பொது தேர்வுகள் சட்டத்தின் கீழ், ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அச்சட்டத்தின்படி, ஒரு மூத்த அதிகாரியால் விசாரணை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதால், எஸ்.பி., பதவிக்கு இணையான ஒரு அதிகாரியை, சி.ஐ.டி., - டி.ஜி.பி., நியமித்து உள்ளார்.
