/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தர்மஸ்தலா குறித்து அவதுாறு பரப்புவதாக மாநிலம் முழுதும்... போராட்டம்! : காங்., அரசை கண்டித்து பேரணி நடத்திய மக்களால் பரபரப்பு
/
தர்மஸ்தலா குறித்து அவதுாறு பரப்புவதாக மாநிலம் முழுதும்... போராட்டம்! : காங்., அரசை கண்டித்து பேரணி நடத்திய மக்களால் பரபரப்பு
தர்மஸ்தலா குறித்து அவதுாறு பரப்புவதாக மாநிலம் முழுதும்... போராட்டம்! : காங்., அரசை கண்டித்து பேரணி நடத்திய மக்களால் பரபரப்பு
தர்மஸ்தலா குறித்து அவதுாறு பரப்புவதாக மாநிலம் முழுதும்... போராட்டம்! : காங்., அரசை கண்டித்து பேரணி நடத்திய மக்களால் பரபரப்பு
ADDED : ஆக 13, 2025 11:03 PM

மங்களூரு: தர்மஸ்தலா குறித்து அவதுாறு பரப்புவதாக மாநிலம் முழுதும் ஹிந்து அமைப்பினர், பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். காங்கிரசை அரசை கண்டித்து பேரணி நடத்திய மக்களால் பரபரப்பு ஏற்பட்டது. தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட, நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உடல்களை புதைத்ததாக கூறி, தர்மஸ்தலாவில் உள்ள கோவிலில் வேலை செய்த, முன்னாள் ஊழியர் அளித்த புகாரில், எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கிறது.
புகார்தாரரை அழைத்து சென்று உடல்கள் புதைக்கப்பட்ட 13 இடங்கள் அடையாளம் காணப்பட்டன. கடந்த மாதம் 29ம் தேதி முதல், பள்ளம் தோண்டும் பணி நடந்தது.
அடையாளம் காட்டியதில் 9 முதல் 13 இடங்களில் நிறைய உடல்கள் புதைத்ததாக, புகார்தாரர் கூறினார். பள்ளம் தோண்டியதில் 6, 11வது இடங்களில் எலும்பு கூடு கிடைத்தது. 13வது இடத்தை தவிர, மற்ற இடங்களில் தோண்டிய போது எதுவும் கிடைக்கவில்லை.
உண்மை கண்டறிய... நேற்று முன்தினம் 13வது இடம் தோண்டப்பட்டது. மற்ற இடங்களில் 8 அடி ஆழம் தோண்டிய நிலையில், 13 வது இடத்தில் மட்டும் 18 அடிக்கு மேல் பள்ளம் தோண்டப்பட்டது. அங்கு எதுவும் கிடைக்கவில்லை.
இதனால் பள்ளம் தோண்டும் பணி நேற்று முன்தினமே முடிந்து விட்டதாக கூறப்பட்டது. ஆனால், 13 வது இடத்தின் அருகே நேற்று மீண்டும் குழி தோண்டப்பட்டது.
அந்த இடத்திலும், 18 அடி பள்ளம் தோண்டியும் எதுவும் கிடைக்காததால், எஸ்.ஐ.டி., அதிகாரிகள் சோர்வு அடைந்தனர்.
புகார்தாரர் கூறியது உண்மை தானா என்ற சந்தேகம் ஏற்பட ஆரம்பித்து உள்ளது. ஆனால், புகார்தாரரோ மேலும் 15 இடங்களை அடையாளம் காட்டுவதாகவும், அங்கும் தோண்டும்படியும் கோரிக்கை வைத்து உள்ளார். ஆனாலும் இதற்கு அதிகாரிகள் தயாராக இல்லை என்று கூறப்படுகிறது.
புகார்தாரரை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தலாமா என்பது குறித்தும், எஸ்.ஐ.டி., அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
இதற்கிடையில், பெங்களூரு விதான் சவுதாவில் உள்துறை அமைச்சர் பரமேஸ்வரை, எஸ்.ஐ.டி., குழு தலைவர் பிரணவ் மொஹந்தி நேற்று சந்தித்தார்.
தர்மஸ்தலா வழக்கில் இதுவரை மேற்கொண்ட விசாரணைகள், எந்தெந்த இடங்களில் குழி தோண்டப்பட்டது; என்னென்ன கிடைத்தது என்பது பற்றி, இடைக்கால அறிக்கை கொடுத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இதுபற்றி உறுதியான தகவல் இல்லை.
பா.ஜ., பாதயாத்திரை இதற்கிடையில், நேற்று முன்தினம் இரவு நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், தர்மஸ்தலாவில் நடக்கும் விசாரணை குறித்து, சில எம்.எல்.ஏ.,க்கள் பிரச்னை கிளப்பி உள்ளனர்.
இதற்கு பதில் அளித்த முதல்வர் சித்தராமையா, எஸ்.ஐ.டி., அமைக்கப்பட்டது பற்றி எனக்கு முதலில் தகவல் தெரியாது; புகார்தாரர் அடையாளம் காட்டிய இடங்களில் எதுவும் கிடைக்காவிட்டால், புதிய இடத்தில் தோண்டும் பணி நடக்காது என்று கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதை வைத்து சித்தராமையாவை, எதிர்க்கட்சியான பா.ஜ., விமர்சித்து வருகிறது. வழக்கில் உண்மை என்று தெரியாமல் அவசரம், அவசரமாக எஸ்.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட்டதாக சாடி உள்ளனர்.
தர்மஸ்தலா வழக்கு குறித்து அங்கு உள்ள கோவில், அதன் நிர்வாக அதிகாரி பற்றி சமூக வலைதளங்களில் சிலர் அவதுாறு கருத்துகளை பரப்பி வருகின்றனர். இதனால் பொதுமக்கள், ஹிந்து அமைப்பினர் கோபம் அடைந்து உள்ளனர்.
அவசரப்பட்டு வழக்கை எஸ்.ஐ.டி.,யிடம் கொடுத்த அரசை கண்டித்தும், அவதுாறு பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும், துமகூரு, மைசூரு, கலபுரகி, கதக், சாம்ராஜ்நகர், சிக்கமகளூரு உட்பட மாநிலம் முழுதும் நேற்று பேரணி நடத்தினர். அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியபடி சென்றனர்.
அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தர்மஸ்தலா வழக்கில் இதுவரை அமைதியாக இருந்த பா.ஜ.,வும், இப்போது களத்தில் இறங்கி உள்ளது.
தர்மஸ்தலா கோவிலை பாதுகாக்கும் நோக்கில், பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தலைமையில், பெங்களூரில் இருந்து தர்மஸ்தலாவுக்கு பாதயாத்திரை செல்லவும் முடிவு செய்து உள்ளனர். இதுபற்றி விரைவில் அறிவிப்பு வெளியிட உள்ளனர்.