ADDED : ஆக 01, 2026 06:33 AM

- நமது நிருபர் -
பூசணிக்காயை வைத்து வீட்டில் சாம்பார், அல்வா, மோர் குழம்பு, தயிர் பச்சடி ஆகிய உணவு வகைகள் சமைப்பதை பார்த்து இருப்போம். ஆனால், பூசணிக்காயில் பாஸ்தா கூட செய்யலாம். பொதுவாக, பாஸ்தா என்றாலே சிக்கன் பாஸ்தா, மசாலா பாஸ்தா என்று தான் இருக்கும். சற்று வித்தியாசமாக செய்யும் பூசணிக்காய் பாஸ்தா கொஞ்சம் இனிப்பாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர். எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
மஞ்சள் பூசணிக்காய் - ஒரு கப்
பாஸ்தா - முக்கால் கப்
முந்திரி - ஆறு
பால் - ஒரு கப்
வெங்காயம் - 1 பெரியது
பனீர் தேவைப்படும் அளவு
உப்பு, எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
அடுப்பை ஆன் செய்து, பெரிய பாத்திரத்தை வைத்து, தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். ஓரளவு கொதித்து வரும் போது பாஸ்தாவை போடவும். சிறிதளவு உப்பும் போட்டு, கொதிக்க விட்டு தனியாக எடுத்து வைக்கவும். பின், மஞ்சள் பூசணிக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு, நன்கு வேக வைத்து ஆற வைக்க வேண்டும். மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் முந்திரி பருப்பு, பால் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.
தோசை கல்லில் எண்ணெய் சேர்த்து, பனீரை சதுர வடிவில் நறுக்கி, பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பனீர், அரைத்து வைத்த பூசணிக்காய் விழுது சேர்த்து, நன்றாக வேக வைக்கவும். அதனுடன் வேகவைத்த பாஸ்தாவையும் சேர்த்து, நன்றாக கிளறி 10 நிமிடத்தில் இறங்கினால் சுவையான பூசணிக்காய் பாஸ்தா தயார்!
