ADDED : மே 25, 2026 10:29 PM

மாண்டியா: மானை விழுங்கிய 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வனத்துறையினர் லாவகமாக பிடித்தனர்.
மாண்டியா மாவட்டம், மலவள்ளி தாலுகாவில் நெட்கல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் வெளிப்புறத்தில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு உள்ளது. இப்பகுதியில் மிகப்பெரிய மலைப்பாம்பு இருப்பதை பார்த்த கிராமத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு, பாம்பு பிடிக்கும் நிபுணர்களுடன் வனத்துறையினர் வந்தனர். 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பார்த்ததும் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த மலைப்பாம்பு 20 கிலோவுக்கு அதிகமான எடை கொண்ட மானை விழுங்கியிருந்தது தெரிந்தது.
அசைய முடியாமல் திணறிய மலைப்பாம்பை பிடிக்கும் முயற்சியில், வனத்துறையினர் மற்றும் பாம்பு மீட்கும் நிபுணர்கள் ஈடுபட்டனர். அரை மணி நேரத்திற்கும் மேல் போராடி பாம்பை பிடித்தனர். இதை கிராமத்தினர் ஆச்சரியமாக பார்த்தனர். மலைப்பாம்பு முட்டாத்தி வனப்பகுதியில் விடப்பட்டது.
