/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சட்டசபையை சந்தி சிரிக்க வைத்த சித்து மீது ராகுல்...'லெப்ட் அண்டு ரைட்!' ; 'ஹனி டிராப்' விவகாரம் வெளியானதால் கடும் கோபம்
/
சட்டசபையை சந்தி சிரிக்க வைத்த சித்து மீது ராகுல்...'லெப்ட் அண்டு ரைட்!' ; 'ஹனி டிராப்' விவகாரம் வெளியானதால் கடும் கோபம்
சட்டசபையை சந்தி சிரிக்க வைத்த சித்து மீது ராகுல்...'லெப்ட் அண்டு ரைட்!' ; 'ஹனி டிராப்' விவகாரம் வெளியானதால் கடும் கோபம்
சட்டசபையை சந்தி சிரிக்க வைத்த சித்து மீது ராகுல்...'லெப்ட் அண்டு ரைட்!' ; 'ஹனி டிராப்' விவகாரம் வெளியானதால் கடும் கோபம்
ADDED : ஏப் 06, 2025 07:34 AM

பெங்களூரு: அமைச்சர் ராஜண்ணா கிளப்பிய, 'ஹனி டிராப்' விவகாரம் சட்டசபையில் சந்தி சிரித்த நிலையில், டில்லிக்குச் சென்ற முதல்வர் சித்தராமையாவை, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் 'லெப்ட் அண்டு ரைட்' வாங்கி உள்ளார். இப்போது, 'லேட்டஸ்ட்'டாக பா.ஜ., தொண்டரின் தற்கொலை விவகாரமும், சித்துவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.'லெப்ட் அண்டு ரைட்!'
தன்னை 'ஹனி டிராப்' செய்ய, இரண்டு முறை முயற்சி நடந்ததாக, கர்நாடக சட்டசபையில் மாநில கூட்டுறவு அமைச்சர் ராஜண்ணா, 'பகீர்' தகவல் கூறினார். அத்துடன் வாயை மூடாமல் மாநில, தேசிய அரசியல்வாதிகள் 48 பேரின் வீடியோக்கள் இருக்கும், 'பென்டிரைவ்' இருப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதை கச்சிதமாக பிடித்துக் கொண்ட பா.ஜ., தலைவர்கள், 'பென்டிரைவ்' இருப்பது பற்றி, சி.பி.ஐ., விசாரணைக்கு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். 'ஹனி டிராப், பென்டிரைவ்' விவகாரம் தேசிய அளவில் பேசும் செய்தியாக மாறியது.
ஆதாரம்
ஆனால், தன்னை 'ஹனி டிராப்' செய்ய முயன்றது பற்றி, போலீசில் புகார் அளிக்க ராஜண்ணாவிடம் ஆதாரம் இல்லை. சட்டசபையில் கூறியது மட்டுமின்றி, ஆதாரம் இன்றி முழித்ததால் ராஜண்ணா மீது, காங்கிரஸ் மேலிடம் கடும் கோபம் அடைந்தது.
கடந்த மூன்று நாட்களாக அவர் டில்லியில் முகாமிட்டு, மேலிட தலைவர்களை சந்திக்க முயன்றார். ஆனால், அதற்கு வாய்ப்பு வழங்கப்படவே இல்லை.
இதற்கிடையில் கடந்த 3ம் தேதி, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை அவரது இல்லத்தில், முதல்வர் சித்தராமையா தனியாக சந்தித்துப் பேசினார். அரைமணி நேரம் இருவரும் பேசிக் கொண்டனர்.
வெளியே சிரித்த முகத்துடன் வந்த சித்தராமையா, கர்நாடகாவில் 'ஆன்லைனி'ல் பணி செய்யும் 'கிக்' தொழிலாளர்களுக்கு ஆணையம் அமைக்கும்படி ராகுல் கூறியதாக ஊடகத்தினரிடம் சொல்லிவிட்டு நகர்ந்தார்.
ஆட்சிக்கு களங்கம்
ஆனால் உண்மையில் உள்ளே நடந்தது வேறு என்று தகவல் வெளியாகி உள்ளது. ராஜண்ணாவை 'ஹனி டிராப்' செய்ய முயன்றது பற்றி, சித்தராமையா பேச்சு எடுத்ததும் ராகுல் முகம் மாறி இருக்கிறது.
சித்தராமையாவிடம் ராகுல், ''சட்டசபையில் 'ஹனி டிராப்' பிரச்னையை எழுப்ப, அவரிடம் கூறியது யார்? நீங்கள் சபையில் இருக்கும்போது, எப்படி அவரை பேசவிட்டீர்கள்?
''ஹனி டிராப் பற்றி அமைச்சர் பேசியதை, டில்லி பத்திரிகைகள், 'டிவி'க்கள் பெரிதுபடுத்திவிட்டன. நம் ஆட்சிக்கு இது ஒரு களங்கம். அனுபவம் வாய்ந்தவர் என்பதால் தானே, உங்களுக்கு முதல்வர் பதவி கொடுக்கப்பட்டது. நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்?'' என, 'லெப்ட் அண்டு ரைட்' வாங்கி உள்ளார்.
''ஹனி டிராப் பற்றி ராஜண்ணா முதலில் கூறவில்லை. பா.ஜ.,வினர் அவரது பெயரை பயன்படுத்தியதால் தான், சட்டசபையில் அவர் பேச வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது,'' என, சித்தராமையா விளக்கம் அளித்திருக்கிறார்.
ஆனால் இதை ராகுல் ஏற்கவில்லை. இதனால் சித்து முகம், சோகமாக மாறி உள்ளது. ''இனி மேலாவது எந்த பிரச்னையும் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்,'' என கூறி, ராகுல் அனுப்பி வைத்துள்ளார்.
சட்ட ஆலோசகர்
ராஜண்ணாவை 'ஹனி டிராப்' செய்ய முயன்றதில், துணை முதல்வர் சிவகுமாருக்கும் தொடர்பு உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. 'அவர்கள் இருவருக்கும் இடையிலான மோதலில் என்னை பலிகடாவாக்க பார்க்கின்றனரே' என, தன் ஆதரவாளர்களிடம் சித்தராமையா புலம்பி உள்ளார்.
டில்லியில் இருந்து ஒரு வழியாக பெங்களூரு திரும்பிய முதல்வருக்கு, மேலும் ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
குடகை சேர்ந்த பா.ஜ., தொண்டர் வினய் சோமய்யா நேற்று முன்தினம் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 'நான் தற்கொலை செய்ய, விராஜ்பேட் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பொன்னண்ணா தான் காரணம்' என, கடிதத்தில் வினய் சோமய்யா எழுதி வைத்துவிட்டார்.
பொன்னண்ணா, சித்தராமையாவின் சட்ட ஆலோசகர். இதை வைத்தும் எதிர்க்கட்சியினர் குடைச்சல் கொடுப்பதால், சித்தராமையாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.