ரயிலில் பயணிக்கு சேவை குறைபாடு ரயில்வேக்கு ரூ.15,000 அபராதம்
ரயிலில் பயணிக்கு சேவை குறைபாடு ரயில்வேக்கு ரூ.15,000 அபராதம்
UPDATED : அக் 28, 2026 12:00 AM
ADDED : அக் 27, 2026 09:44 PM
ஷிவமொக்கா: ரயிலில் பயணித்தபோது, தண்ணீர் வசதி செய்து தர தவறிய ரயில்வே துறைக்கு, மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம், 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உள்ளது.
ஷிவமொக் கா நகர், பசவனகுடியில் பொதுப்பணித்துறை குடியிருப்பில் வசிப்பவர் நாகேந்திரா. கடந்தாண்டு ஏப்ரலில், தனது குடும்பத்தினர், உறவினர்கள் என, 24 பேருடன், திருப்பதி திருமலை கோவிலுக்கு சென்றிருந்தனர்.
சுவாமி தரிசனம் முடித்த பின், பெங்களூரு திரும்பினார். இங்கு, யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ஷிவமொக்காவுக்கு ரயிலில் பயணம் மேற்கொண்டார். இதற்காக ஒருவருக்கு, 1,000 ரூபாய் செலுத்தி டிக்கெட் பெற்றிருந்தார்.
இருப்பினும், அந்த ரயில் கழிவறையில் தண்ணீர் வசதி இல்லை. துமகூரு ரயில் நிலையத்தின் அதிகாரியிடம் புகார் அளித்தும் எந்த பதிலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து, குடும்பத்தினருடன் துமகூரில் இறங்கி, கூடுதலாக, 1,760 ரூபாய் கட்டணம் செலுத்தி, வேறு ரயிலில் ஷிவமொக்கா சென்றார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நாகேந்திரா, ‘ரயிலில் தண்ணீர் வசதி செய்யாததன் மூலம், சேவை குறைபாடு உள்ளது.
எனவே, பயண சீட்டு பணத்தை திருப்பி தர கோரி, ரயில்வே துறையினருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று மாவட்ட நுகர்வார் குறைதீர்ப்பு ஆணையத்தை அணுகினார்.
இருதரப்பு வாதங்களையும் ஆய்வு செய்த ஆணைய தலைவர் சிவண்ணா, உறுப்பினர் யோகானந்த், பெங்களூரு தென்மேற்கு ரயில்வே நிலைய அதிகாரி, துமகூரு ரயில் நிலைய அதிகாரிகள், மனுதாரருக்கு 45 நாட்களுக்குள், 1,000 ரூபாயை, 2025 ஏப்., 15ம் தேதி முதல் ஆண்டுக்கு 6 சதவீதம் வட்டியுடன் செலுத்த வேண்டும்.
இதை செலுத்த தவறினால், முழு தொகையும் செலுத்தும் வரை, ஆண்டுக்கு 10 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும்.
மேலும், புகார்தாரருக்கு இழப்பீடாக, 10 ஆயிரம் ரூபாய், புகார் தொடர்பான செலவுகளுக்காக 5,000 ரூபாய் ஆகியவற்றை, 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும். இத்தொகையை செலுத்த தவறினால், முழு தொகை செலுத்தும் வரை, ஆண்டுக்கு 10 சதவீதம் வட்டியுடன் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
