/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காங்கிரசில் இருந்து விலகல்: மறுக்கிறார் ராஜண்ணா
/
காங்கிரசில் இருந்து விலகல்: மறுக்கிறார் ராஜண்ணா
ADDED : செப் 04, 2025 03:30 AM

துமகூரு: “காங்கிரசில் இருந்து எக்காரணம் கொண்டும் விலக மாட்டேன்,” என, முன்னாள் அமைச்சர் ராஜண்ணா திட்டவட்டமாக கூறி உள்ளார்.
துமகூரு மதுகிரியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பா.ஜ.,வில் இணைய ராஜண்ணா விண்ணப்பம் போட்டு இருப்பதாக, மாகடி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா கூறி உள்ளார்.
அவரது கருத்துகளுக்கு நான் பதில் அளிக்க மாட்டேன். காங்கிரஸ் கட்சி, என்னை ஏமாற்றவில்லை. எக்காரணம் கொண்டும் கட்சியை விட்டு விலக மாட்டேன்.
'அன்னபாக்யா' எனக்கு மிகவும் பிடித்த திட்டம். இந்த திட்டத்தை கொண்டு வந்ததற்காக, முதல்வர் சித்தராமையாவை நான் அதிகம் நேசிக்கிறேன். பசியின் கொடுமையை ஒழித்தவர் அவர். இந்த திட்டத்திற்காக சித்தராமையா, தன் வீட்டில் இருந்து பணம் எடுத்து வரவில்லை என்பது உண்மை தான்.
ஆனால், அவருக்கு முன்பு முதல்வராக இருந்தவர்களுக்கு, 'அன்னபாக்யா' திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று ஏன் தோன்றவில்லை? ஏழைகளுக்கு அரசின் திட்டங்கள் கிடைக்கும் விஷயத்தில், நான் யாருக்கும் பாகுபாடு காட்டியது இல்லை.
நான் இப்போது முன்னாள் அமைச்சர் தான். இதனால் எனக்கு எந்த கவலையும் இல்லை. தேர்தலில் 35,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன். இப்போது தேர்தல் நடந்தாலும், அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி பெறுவேன். நான் ஊழல் செய்தது இல்லை. நான் எதற்காக பா.ஜ.,வில் சேர வேண்டும்?
காங்கிரஸ், பா.ஜ., சுயேச்சை என்று எங்கிருந்து போட்டியிட்டாலும், மதுகிரி மக்கள் என்னை ஆதரிப்பர் என்று நம்பிக்கை உள்ளது. ஓட்டுத் திருட்டிற்கு எதிராக ராகுல் நடத்தும் போராட்டத்தை ஆதரிக்கிறேன்.
சித்தராமையா முதல்வராக இருக்கும் வரை, என் அரசியல் எதிர்காலத்திற்கு எந்த பிரச்னையும் ஏற்படாது. பணம், ஜாதி பலம் இருந்தால் தான் அரசியலில் முன்னேற முடியும். எனக்கு அந்த இரண்டும் இல்லை. ஆனாலும் மதுகிரி மக்கள் எனக்கு அரசியல் வாழ்க்கை கொடுத்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.