/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'பெங்களூரு தெற்கு' என மாறியது ராம்நகர் மாவட்டம்
/
'பெங்களூரு தெற்கு' என மாறியது ராம்நகர் மாவட்டம்
ADDED : மே 23, 2025 05:33 AM

பெங்களூரு: ''ராம்நகர் மாவட்டத்தை, பெங்களூரு தெற்கு மாவட்டம் என பெயர் மாற்ற, அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது,'' என துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
பெங்களூரு மாவட்டம், நிர்வாக வசதிக்காக, 1986ல் பெங்களூரு நகரம், பெங்களூரு ரூரல் என இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன. பெங்களூரு நகர மாவட்டத்தில் பெங்களூரு வடக்கு, பெங்களூரு தெற்கு, பெங்களூரு கிழக்கு, ஆனேக்கல் தாலுகாக்களும்;
பெங்களூரு ரூரல் மாவட்டத்தில் தேவனஹள்ளி, நெலமங்களா, தொட்டபல்லாபூர், ஹொஸ்கோட், ராம்நகர், சென்னபட்டணா, ஹாரோஹள்ளி, கனகபுரா, மாகடி தாலுகாக்களும் இருந்தன.
ராம்நகர் உதயம்
அதன்பின் 2007ல், ம.ஜ.த., - பா.ஜ., கூட்டணி ஆட்சி காலத்தில், அப்போதைய முதல்வர் குமாரசாமி, ராம்நகர், சென்னபட்டணா, ஹாரோஹள்ளி, கனகபுரா, மாகடி தாலுகாக்களை பிரித்து, 'ராம்நகர்' என்ற தனி மாவட்டமாக அறிவித்தார்.
ராம் நகரை தங்கள் கோட்டையாக கருதி வந்த தேவகவுடா குடும்பத்திற்கு, 2023 சட்டசபை தேர்தலிலும், 2024ல் நடந்த இடைத்தேர்தலிலும், குமாரசாமி மகனை தோற்கடித்து, தன், 'பவரை' சிவகுமார் காட்டினார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பின், சிவகுமார் துணை முதல்வரானார். தேவகவுடா குடும்பத்தின் செல்வாக்கை குறைக்க, ராம்நகர் பெயர் மாற்றப்படும் என்று அறிவித்தார். இதற்கு பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், பெயர் மாற்றப்படுவது உறுதி என்று சிவகுமார் தெரிவித்தார்.
இதற்காகவே, 2024 ஜூலையில் ராம்நகர் மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், மக்கள் பிரதிநிதிகள் உட்பட தலைவர்கள், முதல்வர் சித்தராமையாவை சந்தித்து, ராம்நகர் பெயரை, 'பெங்களூரு தெற்கு' என மாற்ற வேண்டும் என்று முறையாக கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று மாலை அமைச்சரவை கூட்டம் முடிந்த பின், துணை முதல்வர் சிவகுமார் அளித்த பேட்டி:
ராம்நகர் முதலில் பெங்களூரு மாவட்டமாக இருந்தது. அதன்பின், தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இன்று (நேற்று) நடந்த அமைச்சரவை கூட்டத்தில், ராம்நகரை, 'பெங்களூரு தெற்கு' மாவட்டம் என்று பெயரிட ஒப்புதல் பெறப்பட்டு உள்ளது.
இனி இம்மாவட்டத்தை 'பெங்களூரு தெற்கு' என்றே அழைக்க வேண்டும். சட்ட விதிமுறைகள், ஒழுங்குமுறைகள், திருத்தங்களை சரிபார்த்து விட்டோம். இது தொடர்பான உத்தரவு வெளியிடப்படும். பெங்களூரு தெற்கு மாவட்ட மக்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாகும்.
மாவட்டத்தின் தலைமையகமாக ராம்நகர் தொடரும்; அதில் எந்த மாற்றமும் இல்லை. அதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. நிலம் தொடர்பான அனைத்து தகவல்களும் மாற்றப்படும். பெங்களூரு தெற்கு மாவட்டத்தில் இருந்து நான் வந்தது பெருமை அளிக்கிறது.
இதற்கு முன், ஹொஸ்கோட், தேவனஹள்ளி, தொட்டபல்லாபூர், சென்னபட்டணா, ராம்நகர், மாகடி, கனகபுரா, பெங்களூரு ரூரல் தாலுகாக்கள் அனைத்தும் பெங்களூரு நகர மாவட்டத்தில் இருந்து வந்தவை தான்.
வளரும் பகுதி
பெங்களூரை சேர்ந்த எங்களின் அடையாளத்தை காப்பாற்ற முயற்சிக்கிறோம். இப்பகுதி தற்போது வளர்ந்து வருகிறது. சட்டத்துக்கு உட்பட்டே இப்பெயர் மாற்றப்பட்டு உள்ளது.
மாவட்டத்தின் பெயர் மாற்றம் மாநில அரசின் உரிமை. இதில் மத்திய அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இத்தகவலை அவர்களுக்கு தெரிவிப்பது மரபு. இதற்கு பல அரசியல் குறிக்கீடுகள் இருந்தன.
இதற்கு முன் மாநிலத்தில் ஆட்சி செய்ய மற்ற கட்சிகள், பெயர் மாற்றும் போது எந்த எதிர்ப்பும் எழவில்லையே? பெயரை மாற்றினால் மாவட்டம் வளர்ச்சி அடைந்து விடுமா என்று கேட்கின்றனர்; பொறுத்திருந்து பாருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
'ராம்நகர் பெயர் மாற்றம் செய்யப்பட்டால், போராட்டம் நடத்துவேன்' என்று குமாரசாமி எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.