/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'மறுசுழற்சி செய்யப்பட்ட நீர் பயன்பாடு தேசிய அளவிலான நெறிமுறை தேவை'
/
'மறுசுழற்சி செய்யப்பட்ட நீர் பயன்பாடு தேசிய அளவிலான நெறிமுறை தேவை'
'மறுசுழற்சி செய்யப்பட்ட நீர் பயன்பாடு தேசிய அளவிலான நெறிமுறை தேவை'
'மறுசுழற்சி செய்யப்பட்ட நீர் பயன்பாடு தேசிய அளவிலான நெறிமுறை தேவை'
ADDED : நவ 07, 2025 05:46 AM

பெங்களூரு: ''மறு சுழற்சி செய்யப்பட்ட நீரின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து, பொது மக்களுக்கு உறுதிப்படுத்தும் வகையில், தேசிய அளவில் ஒரே விதமான நெறிமுறைகள் வகுப்பது அவசியம்,'' என, நிடி ஆயோக் உறுப்பினர் வினோத் பால் தெரிவித்தார்.
கர்நாடக அரசு மற்றும் பெங்களூரு குடிநீர் வாரியம் ஒருங்கிணைப்பில், இந்தியாவில் மறு சுழற்சி செயப்பட்ட நீரை பயன்படுத்துவது குறித்து, இரண்டு நாட்கள் கருத்தரங்கை, நிடி ஆயோக் பெங்களூரில் ஏற்பாடு செய்துள்ளது. இந்த கருத்தரங்கை நிடி ஆயோக் உறுப்பினர் வினோத் பால், நேற்று துவக்கி வைத்தார்.
அவர் பேசியதாவது:
நாட்டில் நீரின் தேவை அதிகரிக்கிறது. எனவே, மறு சுழற்சி செய்யப்பட்ட நீரின் பயன்பாடு, 2030க்குள் 50 சதவீதம், 2045ம் ஆண்டுக்குள் 100 சதவீதமாக வேண்டும். தற்போது 11 மாநிலங்களில் மட்டுமே, மறு சுழற்சி செய்யப்பட்ட நீரை பயன்படுத்துவது தொடர்பான நெறிமுறைகள் உள்ளன. மற்ற மாநிலங்களிலும் இந்த நெறிமுறைகள் வகுக்க வேண்டும். தண்ணீர், வாழ்க்கையின் ஒரு அங்கம் மட்டுமல்ல. தண்ணீர் இருந்தால்தான் வாழ்க்கை என்பதை உணர வேண்டும்.
மறு சுழற்சி செய்யப்பட்ட நீரை பயன்படுத்துவதில், நம்மிடம் உள்ள மூட நம்பிக்கைகளை போக்க வேண்டும். நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. ஆறுகளிலும் நீர் வரத்து குறைகிறது. கங்கை ஆற்றை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. 2045ம் ஆண்டில் 100 சதவீதம் பணி முடியும்.
மறு சுழற்சி செய்யப்பட்ட நீரின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து, பொது மக்களுக்கு உறுதிப்படுத்தும் வகையில், தேசிய அளவில் ஒரே விதமான நெறிமுறைகள் வகுப்பது அவசியம். இதை பற்றி ஏற்கனவே ஆலோசிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசு தலைமை செயலர் ஷாலினி ரஜ்னீஷ் பேசியதாவது:
கடந்த 2024ம் ஆண்டு, பெங்களூரில் குடிநீர் பாதுகாப்பை உறுதிப்படுத்த, சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை, குடிப்பதை தவிர மற்ற தேவைகளுக்கு பயன்படுத்தும்படி உத்தரவிடப்பட்டது. பெங்களூரின் 110 ஏரிகள் சீரமைக்கப்பட்டன. 2028ம் ஆண்டுக்குள் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர் பயன்பாட்டை, 100 சதவீதமாக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இது தொடர்பான விதிமுறைகள், ஏற்கனவே செயல்படுத்தப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
நகர மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலர் துஷார் கிரிநாத் பேசியதாவது:
கழிவு நீர் சுத்திகரிப்பு மையங்கள் மூலமாக, தினமும் 1,350 எம்.எல்.டி., நீர் சுத்திகரிக்கப்படுகிறது. இந்த அளவை மேலும் அதிகரிக்க முயற்சிக்கிறோம். இதற்காக புதிதாக 12 கழிவு நீர் சுத்திகரிப்பு மையங்கள் கட்டப்படுகின்றன. மறு சுழற்சி செய்யப்பட்ட நீரை பயன்படுத்துவது குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

