/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு அமைச்சர்கள் எதிர்ப்பு குறித்து...திட்டவட்டம்!: முதல்வருடன் காங்., மேலிட பொறுப்பாளர் அவசர சந்திப்பு �
/
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு அமைச்சர்கள் எதிர்ப்பு குறித்து...திட்டவட்டம்!: முதல்வருடன் காங்., மேலிட பொறுப்பாளர் அவசர சந்திப்பு �
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு அமைச்சர்கள் எதிர்ப்பு குறித்து...திட்டவட்டம்!: முதல்வருடன் காங்., மேலிட பொறுப்பாளர் அவசர சந்திப்பு �
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு அமைச்சர்கள் எதிர்ப்பு குறித்து...திட்டவட்டம்!: முதல்வருடன் காங்., மேலிட பொறுப்பாளர் அவசர சந்திப்பு �
ADDED : செப் 20, 2025 04:56 AM

பெங்களூரு: ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலாவுடன் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆலோசனை நடத்தினர். “நாளை மறுதினம் அறிவித்தபடி, ஜாதிவாரி கணக்கெடுப்பு துவங்கும்,” என, முதல்வர் திட்டவட்டமாக தெரிவித்தார். கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. கட்சியின் மூத்த தலைவர் ராகுலின் உத்தரவுப்படி, புதிதாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசு முடிவு செய்தது.
நாளை மறுதினம் முதல் கணக்கெடுப்பு துவங்க உள்ளது. இந்த கணக்கெடுப்புக்காக, கர்நாடக பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், ஜாதிகளின் பட்டியலை வெளியிட்டது.
சில ஜாதிகளின் பிரிவில் புதிதாக துணை ஜாதிகள் சேர்க்கப்பட்டன. குருபா கிறிஸ்துவன், பிராமண கிறிஸ்துவன், விஸ்வகர்மா கிறிஸ்துவன், தேவாங்க கிறிஸ்துவன் உட்பட 331 புதிய துணை ஜாதிகள் சேர்க்கப்பட்டன.
இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. ஜாதிவாரி கணக்கெடுப்பால் மக்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.
முதல்வர் கடுப்பு இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், துணை முதல்வர் சிவகுமார் மற்றும் பெரும்பாலான அமைச்சர்கள், 'தற்போதைக்கு, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டாம்' என, எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் முதல்வர் கடுப்பானார்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதால் ஏற்படும் சாதக, பாதகம் குறித்து, சட்ட அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் தலைமையில், நேற்று முன்தினம் இரவு ஆலோசனை நடந்தது.
பத்துக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின், முதல்வரை, அமைச்சர்கள் சந்தித்தனர். இரவு 10:00 மணி வரை அமைச்சர்களுடன், முதல்வர் ஆலோசனை நடத்தினார்.
நேற்று காலை 11:00 மணிக்கு, முதல்வரின் காவிரி இல்லத்தில் மீண்டும் ஆலோசனை நடந்தது. துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் எம்.பி.பாட்டீல், ஈஸ்வர் கன்ட்ரே, சந்தோஷ் லாட், பைரதி சுரேஷ், சிவராஜ் தங்கடகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அமைச்சர்களுடன் விவாதித்த பின், பெங்களூருக்கு வருகை தந்த காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலாவை, தனியார் ஹோட்டலில் சித்தராமையாவும், சிவகுமாரும் சந்தித்துப் பேசினர்.
பா.ஜ., அரசியல் தற்போதைக்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த, அமைச்சர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பது பற்றியும், புதிதாக சேர்க்கப்பட்ட 331 ஜாதிகளை கைவிடலாமா, வேண்டாமா என்பது குறித்தும் அவருடன் இருவரும் ஆலோசனை நடத்தினர்.
இதுபோல சிவகுமாரும், தற்போது கணக்கெடுப்பு நடத்துவதால் ஏற்படும் பாதகம் குறித்து எடுத்துக் கூறினார்.
இந்த சந்திப்புக்கு பின், முதல்வர் சித்தராமையா அளித்த பேட்டியில், ''ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அமைச்சர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. தங்கள் கருத்துகளை கூறினர்.
''ஆனால் அமைச்சர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததாக, பா.ஜ., அரசியல் செய்கிறது. புதிதாக 331 ஜாதிகள் சேர்க்கப்பட்டது பற்றி குழப்பம் நிலவுகிறது. இந்த குழப்பங்கள் சரி செய்யப்படும். ஏற்கனவே கூறியபடி 22ம் தேதியில் இருந்து, ஜாதிவாரி கணக்கெடுப்பு துவங்கும். ஒத்திவைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை,'' என்றார்.
துணை முதல்வர் சிவகுமார் கூறுகையில், ''எதிர்க்கட்சிகள், ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக திட்டமிட்டு தவறான தகவல் பரப்பி சதி செய்கின்றன. எந்த குழப்பத்திற்கும் இடம் கொடுக்காமல் கணக்கெடுப்பு நடத்தப்படும். சட்ட கட்டமைப்பிற்குள் அனைவருக்கும் நீதி வழங்குவோம்,'' என்றார்.
தவறான தகவல் இதற்கிடையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்து, வக்கீல்கள் சுப்பா ரெட்டி, ஜெகதீஷ் ஆகியோர் தாக்கல் செய்த மனு மீது உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணை நடந்தது. நீதிபதிகள் அனு சிவராமன், ராஜேஷ் ராய் விசாரித்தனர்.
கர்நாடக பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல் வாதிடுகையில், ''கணக்கெடுப்பின் நகல் ஏற்கனவே 2 கோடி குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. கணக்கெடுப்பு பற்றி மனுதாரர்களிடம் தவறான தகவல் உள்ளது,'' என்றார்.
மனுதாரர்கள் தரப்பு வக்கீல்கள் வாதிடுகையில், 'ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம், மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது.
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணையத்தால் தான் கணக்கெடுப்பு நடத்த முடியும். மாநில அரசுகள் சுயேச்சையாக கணக்கெடுப்பு நடத்த முடியாது. அரசு மேற்கொள்ள உள்ள கணக்கெடுப்பில் நிறைய குழப்பங்கள் உள்ளன' என்றனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அடுத்த விசாரணையை 22ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.