UPDATED : நவ 12, 2026 12:00 AM
ADDED : நவ 11, 2026 09:48 PM

ஹுலிமாவு: காரை வாடகைக்கு வாங்கி விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் இருந்து, 1.20 கோடி ரூபாய் மதிப்பிலான, 12 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பெங்களூரு ஜே.பி.நகர் 9வது பேசில் வசிப்பவர் சுனில் நாயக், 45. இவர், தான் நடத்தும் முதியோர் இல்லத்திலிருந்து, முதியோரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல தேவைப்படுவதாகக் கூறி, ஹுலிமாவு பகுதியில் வசிக்கும் ரமேஷ் என்பவரின் காரை,2,000 ரூபாய் கொடுத்து, கடந்த மாதம் வாடகைக்கு எடுத்தார்.
ஆனால், சொன்னபடி, சுனில் நாயக், காரை திரும்ப ஒப்படைக்கவில்லை. அவரது மொபைல் போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டடிருந்தது. இதையடுத்து, அவர் கூறிய முகவரியில் சென்று பார்த்தபோது, அங்கு, முதியோர் இல்லமும் இல்லை.
இதுகுறித்து ரமேஷ், கடந்த மாதம் 17ம் தேதி, போலீசாரிடம் புகார் அளித்தார். தலைமறைவான சுனில் நாயக் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் வாடகைக்கு கார் எடுப்பதாக கூறி, 12 பேரிடம் இருந்து, 12கார்களை வாங்கியதும், சில கார்களை அடகு வைத்ததும், சில கார்களை விற்றதும் தெரிந்தது. அதில் கிடைத்த பணத்தில் ஆடம்பர செலவு செய்ததும் தெரியவந்தது.
சுனில் நாயக் கொடுத்த தகவலின்படி ராம்நகர், கனகபுரா, மாண்டியா, மலவள்ளியில் விற்கப்பட்ட, 1.20 கோடி ரூபாய் மதிப்பிலான 12 கார்கள் மீட்கப்பட்டன.
