மக்களின் பிரச்னைகளுக்கு முதலில் தீர்வு காணுங்கள்: பெங்களூரு திருவிழா குறித்து குமாரசாமி அதிருப்தி
மக்களின் பிரச்னைகளுக்கு முதலில் தீர்வு காணுங்கள்: பெங்களூரு திருவிழா குறித்து குமாரசாமி அதிருப்தி
UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 11:14 PM

பெங்களூரு: பெங்களூரு திருவிழாவுக்கு, 20 கோடி ரூபாய் செலவிடுவதற்கு பதில், நகரின் சாலைகள், குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும்படி, கர்நாடக அரசை மத்திய கனரக தொழிற்துறை அமைச்சர் குமாரசாமி வலியுறுத்தினார்.
இது குறித்து, அவர் நேற்று கூறியதாவது:
பெங்களூரில் அடிப்படை வசதிகள் சரி வர இல்லை; பிரச்னை உள்ளது. இந்த பிரச்னைகளை ஓரங்கட்டி ஆடம்பர நிகழ்ச்சி நடத்த வேண்டிய அவசியம் இல்லை. பெங்களூரு மக்கள் தினமும் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு, அரசு தீர்வு காண வேண்டும். மோசமான சாலைகள், போக்குவரத்து நெரிசல், குடிநீர், மின்சாம் பிரச்னைகள் உள்ளன. இத்தகைய பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
நகரின் சாலைகளில் உள்ள பள்ளங்களால், வாகன பயணியர் பரிதவிக்கின்றனர். மற்றொரு பக்கம் மணிக்கணக்கில், வாகன போக்குவரத்து நெருக்கடியில் வாகனங்கள் சிக்குகின்றன.
பெங்களூரில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பொறுப்பில் உள்ள துறைகள், நிதியை பெங்களூரு திருவிழாவுக்கு செலவிட வாய்ப்புள்ளது. பெஸ்காம், குடிநீர் வாரியம், மெட்ரோ உட்பட, சம்பந்தப்பட்ட துறைகள், தங்களிடம் உள்ள நிதியை, அடிப்படை வசதிகள் மேம்பாட்டுக்கு செலவிட வேண்டும்.
மக்களுக்கு பயன்படாத நிகழ்ச்சிகளுக்கு, பணத்தை செலவிட கூடாது.
மழை பற்றாக்குறையால், கிராமப்பகுதி விவசாயிகள், விளைச்சலை இழந்து, பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர். இது போன்ற சூழ்நிலையில், 20 கோடி ரூபாய் செலவிட்டு, பெங்களூரில் திருவிழா கொண்டாடுவது சரியல்ல. இந்த பணத்தை விவசாயிகளுக்காக பயன்படுத்தினால், அர்த்தமுள்ளதாக இருக்கும்.
மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதே, அரசுக்கு முக்கியமாக இருக்க வேண்டும். பெங்களூரின் குடிநீர், மின்சாரம், போக்குவரத்து நெருக்கடி பிரச்னைக்கு தீர்வு கண்ட பின், திருவிழா பற்றி ஆலோசிக்க வேண்டும். ரோம் பற்றி எரியும் போது, மன்னர் நீரோ பிடில் வாசித்தது போல், அரசின் செயல் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
