ADDED : டிச 27, 2025 06:22 AM

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் இனிப்பாக கேக் உள்ளது. கேக்கில் பல, 'பிளேவர்கள்' உள்ளன. கேக்கின் ஈரப்பதம், சுவை, நிறத்திற்காக பெரும்பாலான கேக்குகள் முட்டை சேர்த்தே செய்யப்படுகின்றன. சிலருக்கு கேக்கில் முட்டை சேர்ப்பது பிடிக்காது. முட்டை சேர்க்காமல் சூப்பரான ரோஸ் மில்க் கேக் செய்ய முடியும்.
தேவையான பொருட்கள்
முக்கால் லிட்டர் பால்
மூன்று டீஸ்பூன் கன்டென்ஸ்ட் மில்க்
ஒரு டம்ளர் சர்க்கரை
இரண்டு டீஸ்பூன் தயிர்
அரை டம்ளர் ரீபண்ட் ஆயில்
நான்கு டீஸ்பூன் ரோஸ் சிரப்
இரண்டு டம்ளர் மைதா
அரை டீஸ்பூன் பேக்கிங் பவுடர்,
பேக்கிங் சோடா
விப்பிங் கிரீம், ஐசிங் சுகர், நறுக்கிய
பிஸ்தா, உலர் ரோஸ் பெட்டல்ஸ் தேவையான அளவு
செய்முறை:
நன்கு காய்ச்சி ஆற வைத்த பாலை பெரிய பவுலில் ஊற்றிக் கொள்ளவும். அதனுடன் சர்க்கரை, தயிர், எண்ணெய், ரோஸ் சிரப் சேர்த்து நன்கு மிக்ஸிங் செய்து தனியாக எடுத்து வைக்கவும். இன்னொரு பவுலில் மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து கொள்ளவும்.
பின், முதலில் தயார் செய்து வைத்திருந்த மிக்ஸிங் உடன் சேர்த்து கட்டி இன்றி நன்கு கலந்து விடும் போது, கிரீமி பதத்திற்கு வந்து விடும்.
பின், ஓவன் டின்னில் கேக் கலவையை பதமாக ஊற்ற வேண்டும். ஓவனை 15 நிமிடம் 180 டிகிரி செல்சியஸ் சூட்டில் வைத்து, கேக்கை அதே சூட்டில் தயார் செய்ய வேண்டும்.
இதற்கு நடுவில் பவுலில் ஒரு கப் பால், கன்டென்ஸ்ட் மில்க், ரோஸ் சிரப் ஊற்றி நன்கு மிக்ஸ் செய்தால் ரோஸ் மில்க் ரெடியாகி விடும். ஓவனில் வைத்த கேக் ரெடியானவுடன், சூடு ஆறியவுடன் வெளியே எடுத்து சதுர வடிவில் இருக்கும் பாத்திரத்தில் வைத்து கேக் மீது, ரெடி செய்து வைத்து உள்ள ரோஸ் மில்க்கை ஊற்றினால், கேக் பாலை உறிஞ்சி விடும். பின், பிரிட்ஜில் வைத்து அரை மணி நேரம் வைத்து விட வேண்டும்.
பின், விப்டு கிரீம், ஐசிங் சுகர் சேர்த்து நன்கு கலக்கி விட்டால் கிரீம் பதத்திற்கு வந்து விடும். அரை மணி நேரம் பிரிட்ஜில் இருந்து கேக்கை எடுத்து, அதன் மீது கிரீம் தடவி விட வேண்டும். இதன் மீது நறுக்கிய பிஸ்தா, ரோஸ் பெட்டல்ஸ் சேர்த்து, கேக்கை சுற்றி ரோஸ் மில்க் ஊற்றினால் சாப்ட்டான ரோஸ் மில்க் கேக் தயார்.
- நமது நிருபர் -

