ADDED : ஆக 21, 2025 10:57 PM
எலஹங்கா: சிறையில் இருந்து ஜாமினில் வந்து, பொதுமக்கள் அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்ட, ரவுடி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு, எலஹங்காவை சேர்ந்தவர் மஞ்சுநாத், 40; ரவுடி. 2013ம் ஆண்டில் இருந்து கொலை, கொலை முயற்சி, திருட்டு, கொள்ளை உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இவர் மீது எலஹங்கா, ராஜனுகுண்டே உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.
ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஆறு மாதங்களுக்கு முன்பு ஜாமினில் வந்தார். போலீஸ் நிலையத்திற்கு சென்று ஆஜராகி கையெழுத்து போடாமல் 'டிமிக்கி' கொடுத்தார்.
நடுரோட்டில் நின்று சண்டை போடுவது, கடைக்காரர்களை மிரட்டி பணம் பறிப்பது என பொதுமக்கள் அமைதியை சீர்குலைக்கும் செயலில் ஈடுபட்டார்.
இதுபற்றி அறிந்த பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங், மஞ்சுநாத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவின்படி நேற்று முன்தினம் ராஜனுகுண்டே வனப்பகுதியில் மஞ்சுநாத்தை போலீசார் கைது செய்தனர்.