/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மூதாட்டியை மிரட்டி ரூ.3.9 கோடி பறிப்பு
/
மூதாட்டியை மிரட்டி ரூ.3.9 கோடி பறிப்பு
ADDED : ஆக 11, 2025 04:51 AM
மங்களூரு: தபாலில் போதை பொருள் பார்சல் வந்துள்ளதாக நம்ப வைத்து, மூதாட்டியிடம் 3.9 கோடி ரூபாய் பறித்தது குறித்து, சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில், வழக்கு பதிவாகியுள்ளது.
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு நகரில் வசிக்கும் மூதாட்டி லெனி பிரபு, 65. இவரது மொபைல் போனுக்கு, நடப்பாண்டு ஜனவரி 15ம் தேதியன்று, 'மிஸ்டு கால்' வந்தது. அந்த எண்ணில் தொடர்பு கொண்ட போது, அதில் பேசிய பெண், தன்னை தலைமை தபால் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக, அறிமுகம் செய்து கொண்டார்.
'நீங்கள் சீனாவுக்கு அனுப்பிய பார்சல், திரும்பி வந்துள்ளது. அதில் 150 கிராம் எம்டிஎம்ஏ போதைப்பொருள் உள்ளது. இது குறித்து புகார் பதிவானால், உங்களுக்கு 75 ஆண்டு அல்லது அதற்கும் அதிகமான சிறை தண்டனை கிடைக்கும்' என மிரட்டினார்.
அப்போது லெனி பிரபு, நான் எந்த பார்சலும் அனுப்பவில்லை என, கூறிய போது, அப்பெண் ஏதேதோ கூறி, லெனி பிரபுவை நம்ப வைத்தார். தன் போலியான அடையாள அட்டையை அனுப்பினார். மேலும், 'நான் உங்களுக்கு உதவுகிறேன். போதைப்பொருள் பார்சல் உங்களுடையது இல்லை என்ற கடிதம் அனுப்ப, பணம் கொடுக்க வேண்டும்' என, கேட்டார்.
இதை நம்பிய லெனி பிரபு, கொஞ்சம், கொஞ்சமாக ஜூலை 4ம் தேதி வரை அப்பெண் கூறிய கணக்குக்கு 3.9 கோடி ரூபாய் அனுப்பினார். பணம் கைக்கு கிடைத்த பின், அப்பெண் தொடர்பு கொள்ளவில்லை. அதன்பின்னரே தான் மோசம் போனது, லெனி பிரபுவுக்கு தெரிந்தது.
மங்களூரின் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். போலீசாரும் விசாரிக்கின்றனர்.

