/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரூ.118 கோடி குடிநீர் கட்டணம் பாக்கி மத்திய, மாநில அரசு துறைகள் அலட்சியம்
/
ரூ.118 கோடி குடிநீர் கட்டணம் பாக்கி மத்திய, மாநில அரசு துறைகள் அலட்சியம்
ரூ.118 கோடி குடிநீர் கட்டணம் பாக்கி மத்திய, மாநில அரசு துறைகள் அலட்சியம்
ரூ.118 கோடி குடிநீர் கட்டணம் பாக்கி மத்திய, மாநில அரசு துறைகள் அலட்சியம்
ADDED : ஏப் 03, 2025 07:30 AM

பெங்களூரு : அரசு அலுவலகங்களே, 118 கோடி ரூபாய் குடிநீர் கட்டண பாக்கி வைத்துள்ளதால், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல், குடிநீர் வடிகால் வாரியம் தள்ளாடுகிறது.
பெங்களூரு குடிநீர் வாரியம், பல ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடியால் அவதிப்படுகிறது. குடிநீர் கட்டணத்தை உயர்த்தி, நெருக்கடியை சமாளிக்க முடிவு செய்துள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகள், 118 கோடி ரூபாய் குடிநீர் கட்டணம் பாக்கி வைத்துள்ளன.
இதை செலுத்தும்படி குடிநீர் வாரியம் பல முறை நோட்டீஸ் அனுப்பியும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பொருட்படுத்தவில்லை. இதை வசூலிக்க முடியாமல் குடிநீர் வாரியம் திணறுகிறது.
குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
குடிநீர் வாரியம் சார்பில், 11.14 லட்சம் காவிரி குடிநீர் இணைப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. பராமரிப்புப் பணிகளுக்காக மாதந்தோறும் 85 கோடி ரூபாய் செலவிடுகிறது. பொருளாதார சுமையை சமாளிக்க, குடிநீர் கட்டணத்தை உயர்த்துவதை தவிர, வேறு வழியில்லை.
மத்திய, மாநில அரசுகளின் துறைகளும், குடிநீர் இணைப்பு பெற்றுள்ளன. பல துறைகள் ஆண்டுக்கணக்கில் குடிநீர் கட்டணம் பாக்கி வைத்துள்ளன. 117.78 கோடி ரூபாய் பாக்கி வர வேண்டியுள்ளது.
இதில், மத்திய அரசின் துறைகளே 61 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளன. மத்திய, மாநில அரசு துறைகளிடம் குடிநீர் கட்டண பாக்கியை வசூலிக்க, தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
குழுவில் உள்ள பொறியாளர்கள், அந்தந்த துறைகளின் அதிகாரிகளை சந்தித்து, குடிநீர் கட்டணம் செலுத்தும்படி நோட்டீஸ் அளித்துள்ளனர். விரைவில் செலுத்தும்படி வேண்டுகோள் விடுத்தனர்.
ஆனால் சில துறைகளின் அதிகாரிகள் பொருட்படுத்தவே இல்லை. அரசு துறைகள் என்பதால், நோட்டீஸ் அளிப்பதை தவிர, வேறு எந்த நடவடிக்கையும் எங்களால் எடுக்க முடியாது. பெங்களூரில் குடிநீர் கட்டண உயர்வு குறித்து, நகர மேம்பாட்டுத் துறைக்கு கோரிக்கை அனுப்பப்பட்டது. இந்த துறையில் இருந்து கோப்பு, நிதித்துறைக்கு சென்றுள்ளது.
குடிநீர் கட்டணம் உயர்வு தொடர்பான விஷயம், இன்னும் அமைச்சரவை முன்பாக வரவில்லை. பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதால், குடிநீர் கட்டண உயர்வு அமலுக்கு வருவது தாமதமாகிறது.
கடந்த 2014ம் ஆண்டில் இருந்து, பெங்களூரில் குடிநீர் கட்டணம் உயர்த்தப்படவில்லை. மாநில அரசும் மூன்று ஆண்டுகளாக, குடிநீர் வாரியத்துக்கு ஒரு பைசா நிதியுதவி வழங்கவில்லை. இதன் விளைவாக குடிநீர் வாரியம், ஆண்டுக்கு 1,000 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்திக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.