UPDATED : அக் 20, 2026 12:28 AM
ADDED : அக் 19, 2026 08:24 PM

பல்லாரி: பல்லாரி மாவட்டத்தில் உள்ள ரபகோவி (அரசு) பால் சங்கத்தில் 16.50 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக, அச்சங்கத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் தனஞ்ஜெயா புரூஸ்பேட் போலீஸ் நிலையத்தில் சில நாட்களுக்கு முன் புகார் அளித்தார். தற்போதைய நிர்வாக இயக்குநர் சுதர்ஷன் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்குப்பதிவானது.
இது குறித்து, ரபகோவி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:
ரபகோவி பால் சங்க கணக்காளர் உமாமகேஸ்வரி, 32. இவர், மாட்டின் உரிமையாளர்களுக்கு செலுத்த வேண்டிய மானிய தொகை 47 லட்சம் ரூபாயை, தனது நெருங்கிய உறவினர்களின் வங்கி கணக்குகளுக்கு சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்தார். இது போன்று கடந்த மூன்று ஆண்டுகள் செய்தது கண்டறியப்பட்டது.
இதனால், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரிடமிருந்து 47 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டது. இந்த பணம் மாட்டின் உரிமையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 16.50 கோடி ரூபாய்க்கு ஊழல் நடக்கவில்லை. 47 லட்சம் ரூபாய் மட்டுமே மோசடி நடந்தது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
