ரூ.8 லட்சம் லஞ்சம் வாங்கிய ஜி.எஸ்.டி., கண்காணிப்பாளர் கைது
ரூ.8 லட்சம் லஞ்சம் வாங்கிய ஜி.எஸ்.டி., கண்காணிப்பாளர் கைது
ADDED : செப் 17, 2026 11:17 PM
இரும்பு கடை உரிமையாளரிடம், எட்டு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, மத்திய ஜி.எஸ்.டி., கண்காணிப்பாளரை, லோக் ஆயுக்தா போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரை சேர்ந்த இரும்பு கடை உரிமையாளர் ஜமீர், ஜி.எஸ்.டி., தொடர்பாக, மத்திய ஜி.எஸ்.டி., அலுவலகத்திற்கு நேற்று சென்றார். அங்கிருந்த ஜி.எஸ்.டி., கண்காணிப்பாளர் மோஹித் பிரதாப் சிங் என்பவரை சந்தித்தார்.
ஜி.எஸ்.டி., தொடர்பான பிரச்னையை தீர்த்து வைக்க, எட்டு லட்சம் ரூபாயை, மோஹித் பிரதாப் சிங் லஞ்சமாக கேட்டுள்ளார். சரி என்று கூறிய ஜமீர், லோக் ஆயுக்தா போலீசில் புகார் அளித்தார். அவர்களின் ஆலோசனைபடி, நேற்று மோஹித் பிரதாப் சிங்கிடம், ஜமீர் பணத்தை கொடுத்தார். அப்போது அங்கிருந்த, லோக் ஆயுக்தா போலீசார், அதிகாரியை கைது செய்தனர்.
இது குறித்து ஜமீர் கூறியதாவது:
நாங்கள் நான்கு ஆண்டுகளாக இரும்பு கடை நடத்தி வருகிறோம். ஒரு கிலோவுக்கு எங்களுக்கு 50 பைசா மட்டுமே லாபம் கிடைக்கிறது. ஜி.எஸ்.டி., மத்திய ஜி.எஸ்.டி.,யை தவறாமல் செலுத்தி வருகிறோம்.
வியாபாரம் தொடர்பாக அனைத்து ரசீதுகளும், ஆவணங்களும் எங்களிடம் உள்ளன. இதுவரை சுமார் 3.5 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்துள்ளோம். அதற்கான வரியும் செலுத்தி உள்ளோம்.
இருப்பினும், வரி செலுத்தவில்லை என்று கூறி, 50 லட்சம் ரூபாய் அந்த அதிகாரி லஞ்சமாக கேட்டார்.
இறுதியில் எட்டு லட்சம் ரூபாய்க்கு ஒப்புக் கொண்டார். அவரிடம் பணம் கொடுக்கும் போது, லோக் ஆயுக்தா போலீசார், அவரை கைது செய்தனர்.
அவர் பணம் வாங்கும் வீடியோ, மொபைல்போன் உரையாடல் அனைத்தையும் லோக் ஆயுக்தாவிடம் சமர்ப்பித்து உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
