குடிநீரை வீணாக்கியவர்களிடம் ரூ.34.60 லட்சம் அபராதம் வசூல்
குடிநீரை வீணாக்கியவர்களிடம் ரூ.34.60 லட்சம் அபராதம் வசூல்
ADDED : ஜூலை 29, 2026 11:49 PM
பெங்களூரு: குடிநீரை வீணாக்கிய, 692 பேருக்கு தலா, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மூலம், 34.60 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரில் குடிநீர் பிரச்னையை சமாளிக்க குடிநீரை வீணாக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அவ்வகையில், குடிநீரை வாகனம் கழுவ, தோட்டத்துக்கு, கட்டுமான பணிகள் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தினால் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என பெங்., குடிநீர், வடிகால் வாரியம் கடந்த 5ம் தேதி அறிவித்தது.
இதை தொடர்ந்து நகரில் பல பகுதிகளில் ஆய்வுகள் நடந்தன. இதில், தெற்கு மண்டலத்தில் 206; மேற்கு மண்டலத்தில் 165; மத்திய மண்டலத்தில் 135; கிழக்கு மண்டலத்தில் 100; வடக்கு மண்டலத்தில் 86 பேர் குடிநீரை வீணாக்கியது தெரிய வந்தது.
மொத்தம், 692 பேருக்கு, தலா, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இவர்களிடமிருந்து, 34.60 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக பெங்களூரு குடிநீர், வடிகால் வாரியம் தெரிவித்து உள்ளது.
