ADDED : செப் 13, 2026 11:19 PM

மாண்டியா: கர்நாடக போக்குவரத்து துறைக்கு, 7,000 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க, மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது, என, போக்குவரத்து துறை அமைச்சர் பைரதி சுரேஷ் தெரிவித்தார்.
மாண்டியாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
சமீபத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், முதல்வர் சிவகுமார் போக்குவரத்து துறை மேம்பாட்டுக்கு, அதிக முக்கியத்துவம் அளித்தார். எங்கள் துறைக்கு, 7,000 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க, முதல்வர் ஒப்புதல் அளித்தார். அது மட்டுமின்றி 1,000 பஸ்கள் வாங்கவும், அரசு அனுமதி அளித்துள்ளது.
மாநிலத்தின் பஸ் நிலையங்களை தரம் உயர்த்த, மத்திய அரசிடம், 2,000 கோடி ரூபாய் பெறவும், மாநில அரசின் அனுமதி கிடைத்துள்ளது. 2023ல் சித்தராமையா முதல்வராக பதவியேற்ற பின், ஐந்து வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்தினார். திட்டங்களின் வெற்றி, எங்கள் அரசையே சாரும். இன்றைய முதல்வர் சிவகுமாரும், திட்டங்களை தொடர்கிறார்.
மாணவர்களுக்கு இலவசமாக பஸ் பாஸ் வழங்கும், மற்றொரு திட்டத்தை அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ், மாநிலத்தில் 50 லட்சம் மாணவர்களுக்கு, இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது.
இதற்காக போக்குவரத்து துறைக்கு, 350 கோடி ரூபாய் செலவாகிறது. இதனால் போக்குவரத்து கழகங்களுக்கு பொருளாதாக சுமை ஏற்படுவதை உணர்ந்த முதல்வர், அந்த செலவு தொகையை அரசு வழங்கும் என, உறுதி அளித்துள்ளார்.
ஐந்து வாக்குறுதி திட்டங்களுக்கு, ஆண்டு தோறும், 76,000 கோடி ரூபாயை அரசு செலவிடுகிறது. இதற்காக கடந்த மூன்று ஆண்டுகளில், 1.68 லட்சம் கோடி ரூபாய் செலவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
