UPDATED : நவ 20, 2026 12:00 AM
ADDED : நவ 19, 2026 07:47 PM

– நமது நிருபர் –: கனடாவில் நடந்த காமன்வெல்த், ‘பவர் லிப்டிங் சாம்பியன் ஷிப்’பில், சச்சின் சாலுங்கா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
விஜயபுரா மாவட்டம், பபலேஸ்வரா தாலுகாவின் திகனிபிதரி என்ற சிறு கிராமத்தில் பிறந்தவர் சச்சின் சாலுங்கா. பள்ளி பருவத்திலேயே இவரது விளையாட்டு பயணம் ஆரம்பமானது. ‘ஹேமர் ஸ்ரோ’ விளையாட்டில் ஆர்வம் காட்டினார். பபலேஸ்வராவில் தொடக்க கல்வியை முடித்த பின், துமகூரின் சித்தகங்கா மடம் சார்பில் நடத்தப்படும் பள்ளியில் படிப்பை தொடர்ந்தார். அங்கிருந்த உடற்பயிற்சி ஆசிரியர், மாணவர் சச்சினின் விளையாட்டு திறனை ஊக்குவித்தார்.
பீதரில் நடந்த மாநில அளவிலான போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். அதன்பின் மூடபிதரேவில் ஆள்வால் கல்லுாரியில் விளையாட்டு கோட்டாவில், இலவச சீட் பெற்று பி.யு.சி., சேர்ந்தார். அங்கு படிப்பை முடித்து தொழில் சார்ந்த பயிற்சி பெற்றார். பட்டப்படிப்பு படிக்கும் போதும் ஹேமர் த்ரோ விளையாட்டிலும் பயிற்சியை தொடர்ந்தார்.
தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றார். ஹைதராபாத், கேரளாவில் நடந்த போட்டிகளில் விளையாடி மூன்றாவது இடம் பிடித்தார். இந்த விளையாட்டில் பயிற்சி போதாத காரணத்தால், பளு துாக்கும் விளையாட்டுக்கு மாறினார். 2021ல் சச்சின் தீவிர பயிற்சி பெற்றார்.
பெங்களூரின் கன்டீரவா விளையாட்டு அரங்கில், விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெற்றார். 2022ல் டில்லியில் நடந்த தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று, வெள்ளி பதக்கம் பெற்றார்.
கூடுதல் பயிற்சி பெற ஹூப்பள்ளிக்கு சென்றார். 2024ல் டில்லியில் நடந்த தேசிய சாம்பியன்ஷிப்பில் வெள்ளி பதக்கமும், 2025ல் ஹிமாச்சல பிரதேசத்தில் நடந்த போட்டியில் தங்கப்பதக்கமும் வென்றார்.
இந்த சாதனை, கனடாவில் நடந்த 2026ன் காமன் வெல்த் பவர் லிப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க, வாய்ப்பு கிடைக்க காரணமானது.
முதல் முறையாக சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்ற சச்சின், வெள்ளி பதக்கம் பெற்றுள்ளார். ஏழை விவசாய குடும்பத்தை இவர், விளையாட்டில் சாதனை செய்து, தன் குடும்பத்துக்கும், விஜயபுரா மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
