/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சாம்ராஜ் நகர் ஆக்சிஜன் பலிகள் சம்பவம் பாதிக்கப்பட்டவர்கள் அரசுக்கு எச்சரிக்கை
/
சாம்ராஜ் நகர் ஆக்சிஜன் பலிகள் சம்பவம் பாதிக்கப்பட்டவர்கள் அரசுக்கு எச்சரிக்கை
சாம்ராஜ் நகர் ஆக்சிஜன் பலிகள் சம்பவம் பாதிக்கப்பட்டவர்கள் அரசுக்கு எச்சரிக்கை
சாம்ராஜ் நகர் ஆக்சிஜன் பலிகள் சம்பவம் பாதிக்கப்பட்டவர்கள் அரசுக்கு எச்சரிக்கை
ADDED : ஏப் 29, 2025 06:20 AM

சாம்ராஜ் நகர்: கொரோனா காலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்த 36 பேரின் குடும்பத்தினருக்கு அளித்த வாக்குறுதியை காங்கிரஸ் அரசு நிறைவேற்றாததால், அக்கட்சியினர் வழங்கிய ஒரு லட்சம் ரூபாயை திரும்ப வழங்க முடிவு செய்துள்ளனர்.
கொரோனா தாண்டவமாடியபோது, 2021ம் ஆண்டு சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள், ஆக்சிஜன் பற்றாக்குறையால், 36 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு, அப்போதைய மாநில அரசும், எதிர்க்கட்சியாக இருந்த தற்போதைய காங்கிரஸ் அரசும் பல வாக்குறுதிகளை அளித்திருந்தன.
மலை மஹாதேஸ்வரா மலையில், இம்மாதம் 24ம் தேதி நடந்த சிறப்பு அமைச்சரவை கூட்டத்தில், சாம்ராஜ் நகரில், கொரோனாவில் உயிரிழந்தவர்கள் தொடர்பாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும், சாம்ராஜ் நகரில் அரசு விழாவில் பங்கேற்க முதல்வர் சித்தராமையா வந்திருந்தார்.
அப்போது, 36 குடும்பத்தினரில் 14 குடும்பத்தினர், முதல்வர் சித்தராமையாவை சந்தித்து மனு கொடுத்தனர். மனு பெற்று கொண்ட அவர், எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டார். இதனால் அவர்கள் அதிருப்தி அடைந்தனர்.
அவர்கள் கூறியதாவது:
அரசு பணி வாங்கி தருவதாக உறுதி அளித்த காங்கிரஸ், மனு கொடுத்தபோது எந்தவித பதிலும் கூறாமல் சென்றது, மிகவும் வேதனை அளிக்கிறது.
பாரத் ஜோடா யாத்திரையின் போது குண்டுலுபேட் வந்த ராகுல், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின், உயிரிழந்தவர்கள் அனைவரின் குடும்பத்திற்கும் வேலை வழங்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார். ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகியும், இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மே 4ம் தேதியுடன், அந்த மோசமான சம்பவம் நடந்து நான்கு ஆண்டுகளாகிறது. எங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால், மே 4ம் தேதி, காங்கிரசார் எங்களுக்கு வழங்கி ஒரு லட்சம் ரூபாயை, திருப்பி வழங்க உள்ளோம். ராகுல், சிவகுமாரின் கண்ணீர், முதலை கண்ணீர் என்பதை இப்போது உணர்ந்துள்ளோம்.
கடந்த முறை ஆட்சியில் இருந்த பா.ஜ., அரசு எங்களை நம்ப வைத்து ஏமாற்றியது. அதையே தான் தற்போது காங்கிரஸ் அரசும் செய்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தற்கொலை செய்வேன்!
நான்கு ஆண்டுகளுக்காக ஒவ்வொரு அலுவலகமாக ஏறி இறங்கிவிட்டோம். நாங்கள் சாக தயாராக இருக்கிறோம். பா.ஜ., அரசு என் கணவரின் உயிரை பறித்தது. காங்கிரஸ் அரசு என் மரணத்துக்கு பதில் சொல்ல வேண்டும். மே 4ம் தேதிக்குள் நீதி கிடைக்கவில்லை என்றால், என் சாவுக்கு முதல்வர் சித்தராமையா தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்வேன்.
- நாகரத்னா