/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெலகாவி டி.சி.சி., வங்கி தலைவர் பதவியை கைப்பற்ற பா.ஜ.,வுடன் சவதி கைகோர்ப்பு
/
பெலகாவி டி.சி.சி., வங்கி தலைவர் பதவியை கைப்பற்ற பா.ஜ.,வுடன் சவதி கைகோர்ப்பு
பெலகாவி டி.சி.சி., வங்கி தலைவர் பதவியை கைப்பற்ற பா.ஜ.,வுடன் சவதி கைகோர்ப்பு
பெலகாவி டி.சி.சி., வங்கி தலைவர் பதவியை கைப்பற்ற பா.ஜ.,வுடன் சவதி கைகோர்ப்பு
ADDED : அக் 16, 2025 11:17 PM

பெலகாவி: பெலகாவி டி.சி.சி., எனும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பதவியை கைப்பற்ற, பா.ஜ., முன்னாள் எம்.பி., ரமேஷ் கட்டியுடன், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமண் சவதி, மகேந்திர கல்லப்பா தம்மண்ணவர் கைகோர்த்துள்ளனர்.
பெலகாவியில் டி.சி.சி., வங்கி உள்ளது. வங்கிக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய வரும் 19ம் தேதி தேர்தல் நடக்கிறது. தலைவர் பதவியை கைப்பற்றும் விஷயத்தில் ஜார்கிஹோளி சகோதரர்கள், சிக்கோடி பா.ஜ., முன்னாள் எம்.பி., ரமேஷ் கட்டி இடையே 'நீயா, நானா' போட்டி ஏற்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிக்கு 16 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 9 இயக்குநர்கள் கைகாட்டும் நபரே, வங்கித் தலைவராக தேர்வு செய்யப்படுவர். இதுவரை 9 பேர் போட்டியின்றி இயக்குநர்களாக தேர்வாகி உள்ளனர். இவர்களில் 7 பேர் ஜார்கிஹோளி சகோதரர்களின் ஆதரவு பெற்றவர்கள். ஒருவர் சுயேச்சை. இன்னொருவர் சன்னராஜ் ஹட்டிகோளி. எம்.எல்.சி.,யான இவர், பெண்கள் நல அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரின் சகோதரர் ஆவார்.
7 இடங்கள் ஹுக்கேரி, அதானி, நிப்பானி, பைலஹொங்கல், கிட்டூர், ராமதுர்கா, ராய்பாக் ஆகிய 7 இடங்களுக்கு வரும் 19ல் தேர்தல் நடக்க உள்ளது. ஹுக்கேரியில் முன்னாள் எம்.பி., ரமேஷ் கட்டிக்கு எதிராக, ராஜேந்திர பாட்டீல் என்பவரையும்; அதானியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., லட்சுமண் சவதிக்கு எதிராக, முன்னாள் எம்.எல்.ஏ., மகேஷ் குமட்டள்ளியையும் ஜார்கிஹோளி சகோதரர்கள் களம் இறக்கி உள்ளனர். இந்த இரு இடங்களிலும் கடும் போட்டி நிலவுகிறது.
லட்சுமண் சவதி கட்சி மாறி, காங்கிரசுக்கு வந்தவர். பா.ஜ.,வில் இருந்தபோது துணை முதல்வராக இருந்தார். இவரும், முன்னாள் எம்.பி., ரமேஷ் கட்டியும் நெருங்கிய நண்பர்கள். ரமேஷ் கட்டி, அவரது ஆதரவாளர்கள் வெற்றி பெற, திரைமறைவில் வேலை செய்த லட்சுமண் சவதி, தற்போது நேரடியாக களத்தில் இறங்கி உள்ளார்.
பனிப்போர் ராய்பாக்கில் போட்டியிடும் ரமேஷ் கட்டி ஆதரவாளர் பசனகவுடா அசரங்கிக்கு ஆதரவாக, லட்சுமண் சவதி நேற்று பகிரங்க பிரசாரம் செய்தார். இவர்களின் அணியில், குடச்சி காங்கிரஸ் எம்.எல்.ஏ., மகேந்திர கல்லப்பா தம்மண்ணவரும் இணைந்துள்ளார்.
தேர்தல் நடக்க உள்ள ஏழு இடங்களில் வெற்றி பெறுவதுடன், சுயேச்சை, சன்னராஜ் ஹட்டிகோளியையும் தங்கள் பக்கம் இழுத்து, டி.சி.சி., வங்கித் தலைவர் பதவியை கைப்பற்றுவது, லட்சுமண் சவதி அணியின் நோக்கமாக உள்ளது. பெலகாவி மாவட்டத்தின் அமைச்சர்களாக இருந்தாலும், லட்சுமி ஹெப்பால்கர், சதீஷ் ஜார்கிஹோளி இடையே 'பனிப்போர்' நிலவுகிறது. இதனால் தன் தம்பியை, லட்சுமண் சவதி அணி பக்கம் போகும்படி, லட்சுமி அறிவுறுத்தவும் வாய்ப்பு உள்ளது.
ஒட்டுமொத்தமாக ஜார்கிஹோளி சகோதரர்கள் மூக்கை உடைக்க, அவரது எதிராளிகள் ஒன்று கூடி உள்ளனர். ஆனால் மேலும் 2 இடங்களில் வெற்றி பெற்று, எதிராளிகளுக்கு 'பஞ்ச்' கொடுக்க, ஜார்கிஹோளி சகோதரர்களும் தீவிர முயற்சி செய்கின்றனர்.