/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிறார்களை ஈர்க்கும் அறிவியல் கண்காட்சி
/
சிறார்களை ஈர்க்கும் அறிவியல் கண்காட்சி
ADDED : செப் 30, 2025 05:46 AM

உ ங்கள் வீட்டில் பள்ளி சிறார்கள் உள்ளனரா, அப்படி இருந்தால், தவறாமல் மைசூரில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் கண்காட்சிக்கு அழைத்து வாருங்கள். அவர்களுக்கு அறிவியலில் ஆர்வம் ஏற்படும்.
இது குறித்து, கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் கூறியதாவது:
தசராவை முன்னிட்டு, மைசூரில் ஆண்டுதோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இளைஞர் தசரா, மகளிர் தசரா, உணவு மேளா, மலர் கண்காட்சி என, களை கட்டும். இவற்றில் அறிவியல் கண்காட்சியும் முக்கியமானது. வளரும் சிறார்களுக்கு பள்ளி பருவத்திலேயே, அறிவியலில் ஆர்வம் ஏற்படுத்தும் நோக்கில், அறிவியல் தொடர்பான கண்காட்சி நடத்தப்படுகிறது. இம்முறையும் கண்காட்சி நடந்து வருகிறது.
மைசூரு நகரின் பொருட்காட்சி வளாகத்தில் அறிவியல் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதில் 'இஸ்ரோ' எனும் இந்திய விண்வெளி ஆய்வகம் சார்பில் விண்ணில் செலுத்தப்பட்ட ஏவுகணைகளின் மாதிரிகள் இடம் பெற்றுள்ளன. சிறார்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் ஏவுகணைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்த சந்திராயன், மங்கள்யான் திட்டங்கள் தொடர்பான முழுமையான தகவல் அடங்கிய ஓவியங்கள், சார்ட்கள், மாதிரிகள் மூலமாக விவரிக்கப்பட்டுள்ளது.
கண்காட்சியில் சிறிய வீடியோ டாக்குமென்டரிகள், விண்கலங்களின் மாதிரிகள் சிறார்களை வெகுவாக கவர்ந்துள்ளன. சிறார்களுக்கு அறிவியலில் ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில், தனித்தனி பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு தனித்தனி தகவல் மையங்கள் உள்ளன. இவர்களின் கேள்விகளுக்கு, தொழில்நுட்ப வல்லுநர்கள், விஞ்ஞானிகள் நேரடியாக விளக்கம் அளிப்பர். விண்வெளி தொழில்நுட்பம் அன்றாட வாழ்க்கையில், எப்படி பயன்படுகிறது என்பது கண்காட்சியில் விவரிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோ சாதனைகள், இந்தியாவில் மட்டுமின்றி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. செயற்கை கோள்களின் உதவியுடன், வானிலை அறிவிப்பு, விவசாய முன்னேற்றம், இயற்கை பேரிடர் கண்காணிப்பு என பல்வேறு துறைகளில் புரட்சிகரமான மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இந்த கண்காட்சி அடுத்த தலைமுறையினருக்கு, அறிவியல் மனோபாவத்தை மேம்படுத்த உதவியாக இருக்கும். தினமும் ஏராளமான மாணவ -- மாணவியர், சுற்றுலா பயணியர், அறிவியல் ஆர்வலர்கள் கண்காட்சிக்கு வருகை தருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.