ADDED : ஆக 13, 2026 12:15 AM
நெலமங்களா: சிவகங்கை மலையில் தனியாக மலையேற்றம் சென்று, காணாமல் போன மென் பொறியாளரை தேடும் பணியில், மாநில, தேசிய பேரிடர் மீட்பு படையினருடன், கோதிராஜ் குழுவினர் ஈடுபட்டனர்.
பெங்களூரின் காடுகோடியில் வசிக்கும் அத்வைத் உபாத்யாயா, 31, தனியார் நிறுவனத்தில் மென் பொறியாளராக பணியாற்றுகிறார். இவருக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. ஆகஸ்ட் 7ம் தேதியன்று, நெலமங்களா அருகில் உள்ள சிவகங்கை மலைக்கு டிரெக்கிங் சென்றவர், மர்மமான முறையில் காணாமல் போனார்.
குடும்பத்தினர் புகாரின்படி, கடந்த ஐந்து நாட்களாக மாநில, தேசிய பேரிடர் மீட்பு படையினர், போலீசார், வனத்துறை ஊழியர்கள் மலையை சுற்றி தேடியும், அவரை பற்றிய எந்த தகவலும் தெரியவில்லை. நான்கு ட்ரோன் கேமராக்கள் உதவியுடன், ஒவ்வொரு இடமாக தேடியும் தென்படவில்லை.
இதற்கிடையே, அத்வைத் உபாத்யாயாவின் வீட்டில், அவரது லேப்டாப்பை போலீசார் கைப்பற்றினர். அதில் அவர் தற்கொலை தொடர்பான விஷயங்களை தேடியது தெரிந்தது. எனவே அவர் சிவகங்கை மலையின், சாந்தலா டிராப்பில் இருந்து குதித்து, தற்கொலை செய்திருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில் கோதிராஜ் குழுவினர், நேற்று உதவிக்கு வந்துள்ளனர். மீட்பு படையினருடன் தேடும் பணியை துவக்கினர். கடல் மட்டத்தில் இருந்து, 4,800 அடி உயரத்தில் உள்ள, சாந்தலா டிராப்பில் இருந்து, கோதிராஜ் குழுவினர், கயிற்றின் உதவியுடன் இறங்கி தேடுகின்றனர்.
இது மிகவும் செங்குத்தான, அபாயமான இடமாகும். இந்த இடத்தில் கோதிராஜ் குழுவினர் இறங்கியுள்ளனர். அத்வைத் கிடைக்கும் வரை தேடுவோம் என, அவர்கள் கூறியுள்ளனர்.
கோதிராஜ் என, அழைக்கப்படும் ஜோதிராஜ், மலையேற்ற சாதனையாளர். எந்த பிடிப்பும் இல்லாத, செங்குத்தான பாறைகள், உயரமான சுவர்களை தாவி குதிப்பதில் வல்லவர். எனவே இவரை, கோதி ராஜ், 'கர்நாடகாவின் ஸ்பைடர் மேன்' என, அழைக்கின்றனர்.
தமிழகத்தின், தேனி மாவட்டத்தை சேர்ந்த இவர், தற்போது கர்நாடகாவில் வசிக்கிறார். பல நேரங்களில் போலீசாருக்கு உதவியாக, மீட்பு பணியில் ஈடுபட்டவர்.
