/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரிக்கி ராய் கார் மீது துப்பாக்கி சூடு பாதுகாவலரிடம் தீவிர விசாரணை
/
ரிக்கி ராய் கார் மீது துப்பாக்கி சூடு பாதுகாவலரிடம் தீவிர விசாரணை
ரிக்கி ராய் கார் மீது துப்பாக்கி சூடு பாதுகாவலரிடம் தீவிர விசாரணை
ரிக்கி ராய் கார் மீது துப்பாக்கி சூடு பாதுகாவலரிடம் தீவிர விசாரணை
ADDED : ஏப் 23, 2025 07:05 AM

ராம்நகர் : ரிக்கி ராய் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட வழக்கில், அவரது பாதுகாவலரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மறைந்த முன்னாள் நிழல் உலக தாதா முத்தப்பா ராயின் மகன் ரிக்கி ராய். கடந்த 20ம் தேதி காரில் சென்றபோது துப்பாக்கியால் சுட்டு, ரிக்கி ராயை கொல்ல முயற்சி நடந்தது. இந்த சம்பவம் பற்றி பிடதி போலீசார் விசாரிக்கின்றனர்.
கார் டிரைவர் பசவராஜ் அளித்த புகாரில், முத்தப்பா ராயின் 2வது மனைவி அனுராதா, கூட்டாளி ராகேஷ் மல்லி உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவானது.
அனுராதா வெளிநாடு சென்று விட்டார். மற்ற மூன்று பேருக்கும் விசாரணைக்கு ஆஜராகும்படி, போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். நேற்று மதியம் பிடதி போலீஸ் நிலையத்திற்கு ராகேஷ் மல்லி, தன் வக்கீலுடன் சென்றார்.
அவரிடம், ராம்நகர் எஸ்.பி., சீனிவாச கவுடா, டி.எஸ்.பி., சீனிவாஸ் அரைமணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தினர். பின், அவரை அனுப்பி வைத்தனர். தேவைப்படும் போது, மீண்டும் ஆஜராக வேண்டும் என்று கூறியுள்ளனர்.
எஸ்.பி., மறுப்பு
இதற்கிடையில், ரிக்கி ராயின் பாதுகாவலர்களாக இருக்கும், நான்கு பேரை போலீசார் கண்காணித்து வந்தனர். அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நான்கு பேரில் ஒருவரான மத்தப்பா ராய் என்பவர் மீது, போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.
ரிக்கி ராய் பண்ணை வீட்டில் இருந்து புறப்படுவதற்கு, சிறிது நேரத்திற்கு முன்பு மத்தப்பா ராய் அங்கிருந்து சென்றுள்ளார்.
ரிக்கி ராய் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது பற்றி அறிந்த சிறிது நேரத்தில், அவர் பண்ணை வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார்.
ரிக்கி ராயுடன் ஏதாவது பிரச்னை இருந்திருக்கலாம். கோபத்தில் அவரை கொல்ல துப்பாக்கியால் சுட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்த போலீசார், மத்தப்பா ராயிடம் விசாரித்து வருகின்றனர்.
அவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் எஸ்.பி., சீனிவாஸ் கவுடா மறுத்துள்ளார்.
தொடர்பு இல்லை
இந்த வழக்கில் வெளிநாடு தப்பிச் சென்றதாக கூறப்படும், முத்தப்பா ராயின் இரண்டாவது மனைவி அனுராதா, தன் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை நீதிபதி ஹேமந்த் சந்தன் கவுடர் நேற்று விசாரித்தார். அனுராதா சார்பில் ஆஜரான வக்கீல் வெங்கடேஷ் அரபட்டி வாதிடுகையில், ''என் மனுதாரர் பெயர் தேவையின்றி இழுக்கப்பட்டுள்ளது.
மனுதாரருக்கும், ரிக்கி ராய்க்கும் இடையில் இருந்த சொத்து தகராறு ஆறு மாதங்களுக்கு முன்பு தீர்க்கப்பட்டது.
''அவர் கடந்த 14ம் தேதி ஐரோப்பா சென்றுவிட்டார். ரிக்கி ராயை கொல்ல முயன்றதில், மனுதாரருக்கு எந்த தொடர்பும் இல்லை. வழக்கில் இருந்து அவரது பெயரை கைவிட வேண்டும்,'' என்று கூறினார்.
இதையடுத்து அனுராதா மீது நடவடிக்கை எடுக்க, போலீசாருக்கு தற்காலிக தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.