
சேமியாவில் செய்யப்படும் உப்புமாவை சாப்பிட்டும், பால் பாயாசத்தை குடித்தும் போர் அடித்து விட்டதா; சேமியா மூலம் வேறு ஏதாவது வித்தியாசமாக டிஸ் செய்ய தோன்றுகிறதா; அப்படி என்றால் சேமியா பொங்கல் செய்து பார்க்கலாமா.
தேவையான பொருட்கள்
• சேமியா -150 கிராம்
• பயத்தம் பருப்பு -200 கிராம்
• மிளகு, சீரகம் -தேவையான அளவு
• இஞ்சி -ஒரு துண்டு
• உப்பு -இரண்டு டீஸ்பூன்
• முந்திரி -100 கிராம்
• நெய் -கால் லிட்டர்
• கறிவேப்பிலை, பெருங்காயம் தேவையான அளவு
செய்முறை
பயத்தம் பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு, அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி விட வேண்டும். அடுப்பை ஆன் செய்து குறைவான தீ வைத்து, வாணலியை வைத்து அதில் சேமியாவை போட்டு, வறுத்து எடுத்து தனியாக வைக்கவும். வாணலியில் நெய் ஊற்றி அதனுடன் பெருங்காய பவுடர், மிளகு, சீரகம், முந்திரி, இஞ்சி, கறிவேப்பிலை போட்டு நன்கு பதமாக வறுத்து, அதனுடன் வறுத்து வைத்திருக்கும் சேமியாவையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி கிளற வேண்டும்.
தண்ணீரில் ஊற வைத்திருக்கும் பயத்தம் பருப்பை சேர்த்து, உப்பு சேர்த்து கெட்டியாக வரும் வரை நன்கு கிளறி இறக்கினால் போதும். சூப்பரான சேமியா பொங்கல் ரெடி. சுவை அசத்தலாக இருக்கும். காலை பிரேக் பாஸ்ட்டுக்கு ஏற்ற உணவானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். ரவா பொங்கலும், பெரிய ஜவ்வரிசி பொங்கலும் கிட்டத்தட்ட இதே பாணியில் தான் செய்ய வேண்டும்.
- நமது நிருபர் -

