காங்கிரசுக்கு பின்னடைவு பசனகவுடா எத்னால் கருத்து
காங்கிரசுக்கு பின்னடைவு பசனகவுடா எத்னால் கருத்து
ADDED : மே 30, 2026 02:23 AM

விஜயபுரா: ''சித்தராமையாவின் ராஜினாமாவினால், 2028ன் சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்படும்,'' என விஜயபுரா எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் தெரிவித்தார்.
விஜயபுராவில் அவர் நேற்று அளித்த பேட்டி:
எந்த விதமான வலுவான காரணங்களும் இல்லாமல், சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து, கீழே இறக்கியுள்ளனர். காங்கிரசின் இத்தகைய நடவடிக்கையால், குருபர் சமுதாயத்தினர் அதிருப்தி அடைந்து உள்ளனர்.
பிற்படுத்தப்பட்ட பிரிவின், முக்கியமான சமுதாயத்தினரை காங்கிரஸ் ஏமாற்றி உள்ளது. இதன் லாபம் அடுத்த தேர்தலில், எதிர்க்கட்சிகளுக்கு கிடைப்பது உறுதி.
பிரசாரத்தின் போது, பிற்படுத்தப்பட்ட பிரிவுகளுக்கு ஆதரவாக குரல் எழுப்பும் ராகுல், இப்போது செய்தது என்ன. சித்தராமையா முதல்வர் பதவியில் இருந்து விலகியதால், தலித்துகளுக்கும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. சித்தராமையா தன் பதவி காலத்தில், முஸ்லிம் சமுதாயத்துக்கு மிக அதிகமான முக்கியத்துவம் அளித்தார்.
பதவியின் இறுதி நாட்களிலும், அந்த சமுதாயமே நம்பர் ஒன் என, அறிவித்தார். ஆனால் சித்தராமையா ராஜினாமா செய்த போது, முஸ்லிம் சமுதாயத்தின் எந்த தலைவரும், அவருக்கு ஆதரவாக நின்று போராட்டம் நடத்தவில்லை; எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
பதவியில் இருந்து விலகிய சித்தராமையாவை பற்றி, அதிகம் விமர்சிக்க விரும்பவில்லை. அவருக்கு நல்லது நடக்கட்டும். அவரது ராஜினாமாவினால், 2028ன் சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
