/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
போர் வேண்டாம் என்ற சித்தராமையாவுக்கு நெருக்கடி! தலைப்பு செய்தியாக வெளியிட்ட பாக்., 'டிவி'
/
போர் வேண்டாம் என்ற சித்தராமையாவுக்கு நெருக்கடி! தலைப்பு செய்தியாக வெளியிட்ட பாக்., 'டிவி'
போர் வேண்டாம் என்ற சித்தராமையாவுக்கு நெருக்கடி! தலைப்பு செய்தியாக வெளியிட்ட பாக்., 'டிவி'
போர் வேண்டாம் என்ற சித்தராமையாவுக்கு நெருக்கடி! தலைப்பு செய்தியாக வெளியிட்ட பாக்., 'டிவி'
ADDED : ஏப் 28, 2025 07:00 AM

பெங்களூரு: 'பாகிஸ்தானுடன் போர் வேண்டாம்' என்று முதல்வர் சித்தராமையா கூறியதை, பாகிஸ்தான், 'டிவி' ஒன்று தலைப்பு செய்தியாக வெளியிட்டது. இதனால் கோபம் அடைந்த பா.ஜ., தலைவர்கள், 'சித்தராமையா, பாகிஸ்தான் செல்லட்டும்' என்று கண்டனம் தெரிவித்து உள்ளனர். இதனால் ஏற்பட்ட நெருக்கடியை அடுத்து, 'தேவைப்பட்டால் போர் செய்யலாம்' என்று, சித்தராமையா பல்டி அடித்துள்ளார்.
காஷ்மீரின் புகழ்பெற்ற சுற்றுலா தலமான பஹல்காமில், கடந்த 22ம் தேதி அப்பாவி மக்கள் 26 பேரை, பயங்கரவாதிகள் சுட்டு கொன்றனர்.
இதனால் கடும் கோபம் அடைந்த பிரதமர் நரேந்திர மோடி, உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தார்.
இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இரு நாட்டு அரசுகளும் ராணுவ படைகளை தயார் நிலையில் வைக்க உத்தரவு பிறப்பித்து உள்ளன. இதனால் இரு நாடுகள் இடையில் போர் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
எதிரான குரல்
இது குறித்து கருத்து தெரிவித்த, காங்., கட்சியை சேர்ந்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, 'பாகிஸ்தான் மீது போர் அறிவிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை; போரை நாங்கள் ஆதரிக்கவில்லை' என்றார்.
சித்தராமையாவின் இந்த கருத்தை, பாகிஸ்தானின் முன்னணி, 'டிவி' நிறுவனமான ஜியோ, சித்தராமையாவின் புகைப்படத்துடன் தலைப்பு செய்தியாக வெளியிட்டது.
'போருக்கு எதிராக இந்தியாவிற்குள் இருந்து வரும் குரல்' என்றும் செய்தி வாசிக்கப்பட்டது.
சிவில் விருது
இந்த வீடியோவை, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், 'எக்ஸ்' வலைதளத்தில் வெளியிட்டு கூறியிருப்பதாவது:
'பாகிஸ்தான் ரத்னா' முதல்வர் சித்தராமையா அவர்களே... உங்கள் குழந்தைத்தனம், அபத்தமான அறிக்கையால் ஒரே இரவில் பாகிஸ்தானில் உலக புகழ் பெற்று உள்ளீர்கள். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
நீங்கள் எப்போதாவது பாகிஸ்தான் சென்றால், உங்களுக்கு அந்த நாட்டின் அரச விருந்தோம்பல் உறுதி.
பாகிஸ்தானுக்காக வாதிட்ட ஒரு சிறந்த அமைதி துாதராக பாகிஸ்தான் அரசு, அந்த நாட்டின் மிக உயர்ந்த சிவில் விருதான நிஷான் - இ - பாகிஸ்தான் விருதை வழங்கி கவுரவித்தாலும் ஆச்சரியப்பட எதுவும் இல்லை.
இதய துடிப்பு
எதிரி நாட்டின் கைப்பாவையை போல நடந்து கொள்ளும் உங்களை போன்றவர்கள், பொது வாழ்வில் இருப்பது நமது நாட்டின் மிகப்பெரிய சோகம்.
பாவி பாகிஸ்தானின் வெறிபிடித்த பயங்கரவாதிகளுக்காக, காங்கிரஸ் கட்சியின் இதயங்கள் துடிக்கின்றன.
பஹல்காம் தாக்குதலுக்கு ஹிந்துத்வா காரணம் என்று ராபர்ட் வதேரா கூறுகிறார். அனைத்து மதத்திலும் வழி தவறி சென்றவர்கள் இருக்கின்றனர் என்று அமைச்சர் பிரியங்க் கார்கே முட்டு கொடுக்கிறார்.
காஷ்மீரில் அரசியல் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதே பஹல்காம் சம்பவத்திற்கு காரணம் என்று, காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரமேஷ் பண்டிசித்தே கவுடா கூறுகிறார். உங்களது நிலைப்பாடு தான் என்ன.
இவ்வாறு பதிவிட்டு இருக்கிறார்.
திறந்த ஜீப்
பா.ஜ., தலைவர் விஜயேந்திரா:
பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசியதால், அந்த நாட்டின் ஊடகங்கள் முதல்வர் சித்தராமையாவுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றன.
பாகிஸ்தானுக்கு சாதகமாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டதால், முன்னாள் பிரதமர் நேரு ராவல்பிண்டி தெருக்களில் திறந்த ஜீப்பில் அழைத்து செல்லப்பட்டார்.
பாகிஸ்தானில் திறந்த ஜீப்பில் அழைத்து செல்லப்படும், இந்தியாவின் அடுத்த அரசியல்வாதி சித்தராமையாவா.
ஆர்.எஸ்.எஸ்., பற்றிய முதல்வரின் வெறுப்பு பேச்சு, இவர் பாகிஸ்தான் செய்தி தொடர்பாளரா என்று மக்கள் மனதில் சந்தேகம் எழுப்புகிறது.
அந்த நாட்டு ஊடகங்கள் உங்களை புகழ்வதால், உங்களை பற்றி மக்கள் புரிந்து கொள்ள துவங்கி உள்ளனர். ஆர்.எஸ்.எஸ்., பற்றி பேச சித்தராமையாவுக்கு எந்த தகுதியும் கிடையாது.
அரசியலில் நுழைவதற்கு முன்பு அவர் எந்த போராட்டத்திலும் பங்கேற்றதற்கு ஆதாரம் இல்லை.
உண்மையான தியாகம், வரலாற்றை கொண்டது ஆர்.எஸ்.எஸ்., உங்களை போன்று வேறொருவர் கட்டிய கோட்டையில் அமர்ந்து, அதிகாரத்தை ருசிக்கும் வேலையை ஆர்.எஸ்.எஸ்., ஒருபோதும் செய்தது இல்லை.
பயங்கரவாதிகள் அட்டூழியத்தை நாட்டு மக்கள் எதிர்க்கும் போது, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போன்று பேசாதீர்கள். இது உங்களுக்கு கவுரவம் பெற்று தராது. மக்கள் உணர்வுகளை புரிந்து கொண்டு பேசுங்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
'பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசும், முதல்வர் சித்தராமையா இந்தியாவை விட்டு வெளியேறி, பாகிஸ்தானுக்கு குடியேற வேண்டும்' என்று, பா.ஜ., தலைவர்கள் சிலர் விமர்சித்தனர்.
பேச்சு திரிப்பு
இதையடுத்து, தன் பேச்சால் ஏற்பட்ட நெருக்கடியை உணர்ந்து, சித்தராமையா, யு - டர்ன் அடித்து உள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டியில், '' நாட்டின் அமைதி, பாதுகாப்பு, நல்லிணக்கம், இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் யாராக இருந்தாலும், அவர்களை சும்மா விடுவது எனற பேச்சுக்கே இடமில்லை.
பாகிஸ்தான் மீது போர் வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. தவிர்க்க முடியாத பட்சத்தில் மட்டுமே போர் நடக்கும் என்று தான் கூறினேன். எனது பேச்சை பா.ஜ., தலைவர்கள் திரித்து விட்டுள்ளனர்,'' என்றார்.