பெண்ணை கழுத்தறுத்து கொன்ற வழக்கில் மைத்துனி, உறவினர் கைது
பெண்ணை கழுத்தறுத்து கொன்ற வழக்கில் மைத்துனி, உறவினர் கைது
ADDED : ஜூன் 01, 2026 12:10 AM

சிக்கபல்லாபூர்: சிக்கபல்லாபூர் டவுன் கந்த்வாரா லே - அவுட்டில் வசிப்பவர் பாபுஜி நரசிம்மமூர்த்தி. இவரது மகன் பரத், 27. மருமகள் புஷ்பலதா, 23. கடந்த 27ம் தேதி பாபுஜி, இவரது மனைவி விஜயலட்சுமி, மகன் பரத் ஆகியோர் கேரளாவில் உள்ள கோவில்களுக்கு சென்று இருந்தனர்.
இதனால் வீட்டில் புஷ்பலதா, பரத்தின் தங்கை பவ்யா, 25, ஆகியோர் இருந்தனர். 28ம் தேதி இரவு வீட்டிற்குள் புகுந்த நபர்கள் புஷ்பலதாவின் கழுத்தை அறுத்து கொன்று, அவர் அணிந்திருந்த நகைகளை திருடினர்.
குடும்ப தகராறில், கூலிப்படையை ஏவி, பாபுஜி குடும்பத்தினரே, புஷ்பலதாவை கொன்றதாக, இறந்த அந்த பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். சிக்கபல்லாபூர் போலீசார் விசாரித்தனர். பவ்யா மீது சந்தேகம் ஏற்பட்டது.
அவரிடம் போலீசார், கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். புஷ்பலதாவை, தன் உறவினர் லோகித், 24, என்பவருடன் சேர்ந்து கொன்றதை ஒப்பு கொண்டார். பவ்யா, லோகித் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
பவ்யாவுக்கு திருமணம் முடிந்து விட்டது. திருமணத்திற்கு முன் ஒருவரை காதலித்தார். திருமணத்திற்கு பின், தனது முன்னாள் காதலனுடன் கள்ளத்தொடர்பில் இருந்து உள்ளார்.
பவ்யாவுடன் நெருக்கமாக இருந்ததை, முன்னாள் காதலன் வீடியோ எடுத்தார். அந்த வீடியோவை பவ்யாவுக்கு அனுப்பி பணம் கேட்டு தொல்லை கொடுத்தார்.
தன் முன்னாள் காதலன் அனுப்பிய வீடியோவை, உறவினர் லோகித்திற்கு அனுப்பிய பவ்யா, முன்னாள் காதலன் தன்னை மிரட்டுவது பற்றி கூறி உள்ளார். அந்த வீடியோவை வைத்து பவ்யாவை, லோகித்தும் மிரட்ட ஆரம்பித்து உள்ளார்.
லோகித்திற்கு, 2 லட்சம் ரூபாய் பவ்யா கொடுத்தார். மேற்கொண்டு பணம் கேட்டு லோகித் நெருக்கடி கொடுத்து உள்ளார். தன்னிடம் பணம் இல்லை என்று கூறிய பவ்யா, தன் அண்ணி புஷ்பலதா அணிந்திருக்கும் நகைகளை கொள்ளை அடிக்கலாம் என, லோகித்திடம் கூறி அவரை வீட்டிற்கு வரவழைத்தார்.
புஷ்பலதா உயிருடன் இருந்தால் நகையை கொள்ளையடிக்க முடியாது என்று நினைத்து, அவரை கழுத்தை அறுத்து கொலை செய்து, நகையை கொள்ளையடித்து சென்றது போலீஸ் விசாரணையில் தெரிந்தது.
